புதுடெல்லி: இந்தியாவில் தானியக்க வங்கி இயந்திரங்களிலிருந்து (ஏடிஎம்) பணம் எடுப்பது இனி செலவுமிக்கதாகலாம்.
இவ்வாண்டு மே 1ஆம் தேதியிலிருந்து வேறு வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான சேவைக் கட்டணத்தை (interchange fee) உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இலவசப் பரிமாற்ற எண்ணிக்கையைவிட கூடுதல் முறை ஏடிஎம்மைப் பயன்படுத்துவோரும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.
ஒரு வங்கி, இன்னொரு வங்கியின் ஏடிஎம் சேவைகளைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் செலுத்துகிறது. ஒரு பரிமாற்றத்திற்கு இவ்வளவு என வகுக்கப்படும் அக்கட்டணத்தை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நடைமுறைச் செலவுகள் அதிகரிப்பால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஏடிஎம் சேவைக் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கும்படி வங்கிகள் கோரிக்கை விடுத்தன.
ரிசர்வ் வங்கி அதனை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஏடிஎம் சேவைக் கட்டண உயர்வு நாடு முழுமைக்கும் இருக்கும். இது குறிப்பாக சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏடிஎம் கட்டமைப்பிற்கும் அதுசார்ந்த சேவைகளுக்கும் சிறிய வங்கிகள் பெரும்பாலும் பெரிய நிதி நிறுவனங்களையே நாடியிருக்கின்றண.
வரும் மே 1ஆம் தேதியிலிருந்து, இலவச எண்ணிக்கையைவிட கூடுதல் முறை ஏடிஎம்மைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக இரண்டு ரூபாய் செலுத்த வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அதாவது, ஏடிஎம்மில் பணமெடுக்க இப்போது 17 ரூபாய் செலவிடும் நிலையில், மே மாதத்திலிருந்து 19 ரூபாய் செலுத்த வேண்டும்.
தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிந்துகொள்வது உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ஒரு ரூபாய் செலுத்த வேண்டும் என்று அதிகாரத்துவ அறிக்கை தெரிவிப்பதாக ஐஏஎன்எஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, ஏடிஎம் வழியாகத் தங்கள் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு வாடிக்கையாளர்கள் இனி ஏழு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
மின்னிலக்கவழி பணப் பரிமாற்றம் பெருகிவருவதால் ஏடிஎம் இயந்திரங்களுக்கான நடைமுறை, பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஏடிஎம்மைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்போது இன்னும் அதிகமானோர் மின்னிலக்கவழி பணப் பரிமாற்றத்தை நாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.