பாகிஸ்தான்மீது இந்தியா தாக்குதல்; பலர் மரணம்; பதிலடி தரப்படும் என பாகிஸ்தான் சூளுரை

2 mins read
58813b58-5446-4cae-a2f3-b6dac216af90
பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரின் தலைநகரான முஸாஃபார்பாத்தில் மலைகளைச் சுற்றி பல முறை வெடிச்சத்தம் ஒலித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

இஸ்லாமாபாத்: இந்தியா புதன்கிழமை விடியற்காலை (மே 7) பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் குண்டுவீச்சில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.

‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து, ஒன்பது இடங்களில் மே 7 அதிகாலை 1.05 முதல் 1.30 வரை தாக்குதல் நடத்தியதாக இந்தியா அறிவித்தது. கிட்டத்தட்ட 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை ஏவி இந்தியா தாக்குதல் நடத்தியது.

தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தனது நடவடிக்கைகளை ‘கவனமாக, அளந்து, தீவிரமடையாத வகையில் மேற்கொண்டதாக’ இந்தியா குறிப்பிட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட 9 தளங்களில் நான்கு பாகிஸ்தானுக்குள் அமைந்திருந்தன. மீதமுள்ள ஐந்து தளங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளன.

பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொளியில், ‘நீதி நிலைநாட்டப்பட்டது’ என்று குறிப்பிட்டது.

காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துக் கட்சிகள், இந்தியத் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் ராணுவத்தைப் பாராட்டி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசிய பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிஃப், பழிவாங்கும் நடவடிக்கையை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள அதிக நேரம் எடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டில் புகழ்பெறுவதற்காக தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்தத் தாக்குதல் அப்பட்டமான போர்ச் செயல் என்று விமர்சித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், “தகுந்த பதிலடி கொடுக்க எங்கள் நாட்டுக்கு முழு உரிமை உள்ளது,” என்று சூளுரைத்தார்.

பாகிஸ்தான் நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீரின் பாவல்பூர், முரிடிக் உள்ளிட்ட இடங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்டது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பழிவாங்க முற்பட்டது. எந்த நேரத்திலும் பாகிஸ்தானை இந்தியா தாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய வேளையில், அண்மைய தாக்குதல் அரங்கேறியது.

முன்னதாக பிரதமர் மோடி, முப்படைத் தளபதிகளுடனும் பாதுகாப்புச் செயலாளருடனும் ஆலோசனை நடத்தினார்.

அது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, இந்தியாவின் ஐந்து போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

நிலைமையை மேலும் தீவிரமாக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்றும் பாகிஸ்தான் தீவிரமடைய முடிவு செய்தால் உறுதியாகப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அஜித் தோவல் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான பேச்சில் வலியறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்