சீனாவுடன் உறவை புதுப்பிக்க இந்தியா முயற்சி: பியூஷ் கோயல்

சீனாவுடன் உறவை புதுப்பிக்க இந்தியா முயற்சி: பியூஷ் கோயல்

படம்: புளூம்பர்க்

14 Oct 2026 - 7:57 pm

2 mins read

புதுடெல்லி: சீனாவுடனான தூதரக, வணிக உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா முயன்று வருவதாக மத்திய வணிக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை (அக்டோபர் 14) தெரிவித்துள்ளார்.

நியாயமான வணிக ஒப்பந்தமும், புவிசார் அரசியல் சூழல் மோசமடையாமல் இருப்பதும் உறுதிசெய்யப்பட்டால் எந்தவொரு நாட்டுடனும் பங்காளித்துவத்தை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றார் அவர்.

கடந்த காலத்தில் சில சிக்கல்கள் இருந்தபோதிலும், சீனாவுடனான உறவை மேம்படுத்த இந்தியா உழைத்து வருகிறது என்று புளூம்பெர்க் அமைப்பின் நிகழ்வில் பேசிய அவர் கூறினார்.

2025-26 நிதியாண்டில் இருநாட்டு வணிகம் 7.9 விழுக்காடு உயர்ந்து 151.10 பில்லியன் அமெரிக்க டாலரை (ஏறக்குறைய S$200 பில்லியன்) எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 36.62 விழுக்காடு அதிகரித்து 19.47 பில்லியன் டாலரை எட்டியது. முந்தைய நிதியாண்டில் இது $14.25 பில்லியனாக இருந்தது. அதேவேளையில், சீனாவிலிருந்து இறக்குமதி 16 விழுக்காடு உயர்ந்து $131.62 பில்லியனாகக் கூடியது. இதில், சீனாவுடனான இந்தியாவின் வணிகப் பற்றாக்குறை 112.16 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இந்தியாவின் கவலைக்குரிய விஷயமாக உள்ளது

சீனா உட்பட எல்லைப் பகிரும் நாடுகளின் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொவிட்-19 தொற்றுக் காலத்தில் அனைத்துலக விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டபோது, ஃபைசர், மொடர்னா போன்ற மேற்கத்திய தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவிற்கு உதவ மறுத்ததை நினைவுகூர்ந்த அமைச்சர் கோயல், அதனாலேயே பிரதமர் நரேந்திர மோடி ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தை முடுக்கிவிட்டதாகச் சுட்டினார்.

பகுதி மின்கடத்தித் துறையில் சிங்கப்பூர் உதவி

அதே நிகழ்வில் பேசிய சிங்கப்பூர் துணைப் பிரதமரும் வணிக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், இந்தியாவின் பகுதி மின்கடத்தித் துறையை வலுப்படுத்தவும், அங்குள்ள ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தவும் சிங்கப்பூர்-இந்தியா இணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு வணிகத்தைத் தாண்டி தற்காப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் வலுவாக உள்ளது என்றும், இரு நாடுகளுக்கிடையிலான வணிக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் அமைச்சர் கோயல் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசீனாஉறவுஇருதரப்பு உறவுபங்காளித்துவம்ஏற்றுமதிவணிகம்