சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை

சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை

2 mins read
f3dc5344-037e-4a36-8aeb-e5e377c57177
இந்தியாவின் தடை காரணமாக, சர்க்கரை வணிகர்கள் அடுத்து பிரேசிலையும் தாய்லாந்தையும் நாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: புளூம்பெர்க்

புதுடெல்லி: உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கிடைப்பதை உறுதிசெய்யவும் அதன் விலையைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக, 2026 செப்டம்பர் 30 அல்லது அடுத்த ஆணை பிறப்பிக்கப்படும்வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் தீட்டப்படாத சர்க்கரையையும் (raw sugar), வெள்ளைச் சர்க்கரையையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை (மே 13) அரசு ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உள்நாட்டுத் தேவையைவிட உற்பத்தி குறையக்கூடும் எனும்படியான சூழலில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு சர்க்கரை கையிருப்பு உள்ளதாக முதற்கட்ட மதிப்பீடுகள் கூறியதால், முன்னதாக 1.59 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், முக்கியப் பகுதிகளில் கரும்பு விளைச்சல் குறைந்துள்ளதால் சர்க்கரை விநியோகம் குறித்து கவலை எழுந்துள்ளது.

அத்துடன், ‘எல் நினோ’ பருவநிலைச் சூழலால் இவ்வாண்டு பருவமழை குறைவாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. அது அடுத்த ஆண்டு கரும்பு விளைச்சலிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் தடை காரணமாக, சர்க்கரை வணிகர்கள் அடுத்து பிரேசிலையும் தாய்லாந்தையும் நாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபந்தனைகளுடன் அனுமதி

சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளபோதும் முன்னரே அனுமதிக்கப்பட்ட ஏற்றுமதிக்குக் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, தடை குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியாவதற்கு முன்பே கப்பல்களில் சர்க்கரை ஏற்றத் தொடங்கியிருந்தால் அவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.

அதேபோல், அறிவிப்பு நடைமுறைக்கு வரும் முன்னரே சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்தியத் துறைமுகத்திற்கு வந்துவிட்டாலோ அல்லது நங்கூரமிட்டிருந்தாலோ அத்தகைய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும்.

கூடுதலாக, சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை ஆணை வெளியாவதற்கு சுங்க அதிகாரிகளிடம் அல்லது காப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அவற்றை ஏற்றுமதி செய்யவும் தடையிருக்காது.

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட ஏற்றுமதி அளவில் கிட்டத்தட்ட 800,000 டன்னுக்கான ஒப்பந்தங்கள் ஏற்கெனவே கையெழுத்தாகிவிட்டன என்றும் அவற்றில் 600,000 டன்னுக்கும்மேல் ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டன என்றும் வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்