புதுடெல்லி: இந்தியாவில் சிறார்களுக்கு வழங்கப்படும் இருமல், சளி மருந்துகள் குறித்து அந்நாட்டு அரசு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறிப்பிட்ட வேதிப்பொருள்களைக் கொண்ட நிலையான கலவைகளின் உற்பத்தி, விற்பனையை முறைப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியச் சுகாதாரம், குடும்பநல அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ‘குளோர்ஃபெனிரமின் மாலியெட்’ (Chlorpheniramine Maleate), ‘ஃபெனில்எஃப்ரின் ஹைட்ரோகுளோரைட்’ (Phenylephrine Hydrochloride) ஆகிய இரண்டு வேதிப்பொருள்களின் கலவையில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்குப் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை வாசகம் கட்டாயம்
இந்த வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அனைத்து மருந்துப் போத்தல்களிலும் அட்டைப்பெட்டிகளிலும் ‘நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது’ என்ற எச்சரிக்கை வாசகத்தைப் பயனீட்டாளர்கள் எளிதில் படிக்கும் வகையில் தெளிவாக அச்சிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஏப்ரல் 15ஆம் தேதி, இதேபோன்ற குறிப்பிட்ட வேதிப்பொருள் கலவைகளைக் கொண்ட மருந்துகள் குறித்து மத்திய அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிய குழந்தைகளுக்கு முறையற்ற மருந்து அளவுகள் அல்லது கலவைகள் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இதைக் கவனத்தில் கொண்டும் மருத்துவர்களின் பரிந்துரையின்றி பெற்றோர் நேரடியாகக் கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு மருந்தளிப்பதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.


