சியாட்டில்: வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே மிகப்பெரிய மென்பொருள் உருவாக்குபவர்களைக் கொண்ட மையமாக இந்தியா உருவெடுக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
சியாட்டில் நகரில் ‘ஐடியாஸ்4இந்தியா’ என்ற தலைப்பில் இந்தியா - அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான சிறப்பு மாநாடு நடைபெற்றது.
அமேசான், ஓபன்ஏஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் சத்யா நாதெல்லா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “சியாட்டில் தொழில்நுட்பச் சமூகத்தின் 35 ஆண்டுகால வளர்ச்சியைப் பார்ப்பதோடு, அது இந்தியாவுடனான தனது உறவை வலுப்படுத்தி வருவதைக் கண்டு பெருமிதமடைகிறேன்.
“மேலும், செயற்கை நுண்ணறிவின் நன்மைகள், சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சமூகங்கள் முழுவதும் பரவலாகக் கொண்டு சேர்க்கப்படுவதைப் பொறுத்தே அமையும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தியாவின் மனிதவளத் திறன் பாராட்டும் வகையில் உள்ளது. 2030க்குள் உலகிலேயே மிகப்பெரிய மென்பொருள் உருவாக்குபவர்களைக் கொண்ட சமூகமாக இந்தியா உருவெடுக்கும்,” என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, கிளவுட், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்காக இந்தியாவில் 17.5 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேபோல், மும்பை, ஹைதராபாத் தரவு மைய விரிவாக்கம் உட்பட மொத்தம் 48 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் நிறுவனமும் தெரிவித்து உள்ளது.
