புதுடெல்லி: இந்தியா, பெல்ஜிய தற்காப்பு நிறுவனங்களுக்கு இடையே அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல்வேறு முக்கியத் தற்காப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பெல்ஜியப் பிரதமர் பார்ட் டி வெவர், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவம், வணிகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசினர். இருநாட்டு உறவில் ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூணாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ வீரர்கள் பரிமாற்றம், பயிற்சி ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் திரு மோடி கூறினார்.
வெடிமருந்துகள், ராக்கெட்டுகள், ஆளில்லா கடல்சார் அமைப்புகள், ஆளில்லா வானூர்தி எதிர்ப்பு தொழில்நுட்பங்கள், வான் பாதுகாப்பு மென்பொருள், கவச வாகனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளன.
இருநாட்டு தற்காப்பு அமைச்சுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், ராணுவப் பயிற்சி, ஆய்வு, தற்காப்புத் துறை தொழில்துறை பங்காளித்துவத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்காப்பு ஒத்துழைப்பை இந்தியா-பெல்ஜியம் உறவின் முக்கிய தூண் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தங்கள் கூட்டு மேம்பாடு, கூட்டு உற்பத்திக்கு வழிவகுக்கும் என்றார். அதற்கு உதாரணமாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் ‘சோராவர்’ இலகுரக பீரங்கியை அவர் குறிப்பிட்டார்.
எல்&டி, கல்யாணி ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள், பெல்ஜியம் உட்பட, ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் ராக்கெட் அமைப்புகள், கண்ணிவெடி தடுப்புக் கப்பல்களைத் தயாரிக்கவுள்ளன.
மேலும், பொருளியல் உறவுகளையும் விரிவுபடுத்த இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
வரும் ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வணிகத்தை இரட்டிப்பாக்கவும், இந்தியாவில் முதலீடு செய்யும் பெல்ஜிய நிறுவனங்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்க விரைவு முதலீட்டு வழிமுறையை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதிகொண்டுள்ளன.


