தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா, பூட்டான் இடையே ரூ.4,033 கோடியில் பாதை அமைக்கத் திட்டம்

2 mins read
562f4ae3-b5e7-4160-b636-3ba00ea178a4
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா-பூட்டான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது ரயில் இணைப்பு இல்லை என்றார்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ரயில் சேவை ஏற்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் பூட்டானில் இருந்து இந்தியாவின் இரு நகரங்களுக்கு ரயில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது என்றும் அறிவித்தார்.

அசாமின் கோக்ராசார் -பூட்டான் நாட்டின் கெலபு ஆகிய நகரங்களுக்கும், மேற்கு வங்கத்தின் பனாரத் - பூட்டான் நாட்டின் சம்சே நகரங்களுக்கும் ரயில் இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 89 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பாதை 4,033 கோடி ரூபாயில் அமைய உள்ளது.

“இரு நாடுகளுக்குமிடையே ரயில் இணைப்பை ஏற்படுத்துவதில், மிகப்பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு, கலாசாரம், வளர்ச்சி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டது இத்திட்டம்.

“பிரதமர் நரேந்திர மோடி 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூட்டானுக்கு சென்றிருந்தபோது, அந்நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ருக் யால்போ’ அவருக்கு வழங்கப்பட்டது.

“பூட்டான் அமைச்சர்களும், பிரதமரும் தொடர்ந்து இந்தியாவுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்தியா பூட்டானுக்கு அதிகமான உதவிகளை வழங்கி வரும் முக்கிய நாடாக இருந்து வருகிறது. நவீனமயமாக்கலில், குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளது,” என்றார் திரு விக்ரம் மிஸ்ரி.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், அடுத்த மூன்று மற்றும் நான்கு ஆண்டுகளில் மேலும் இரு புதிய திட்டங்ககள் செயல்படுத்தப்படும் என்றார்.

“இந்த இணைப்பின் மூலம் இந்தியாவின் ஒன்றரை லட்சம் கிலோமீட்டர் ரயில் பாதையுடன் பூட்டான் இணைக்கப்படும். பூட்டான் பொருளியல் வளர்ச்சி காணவும் அந்நாட்டு மக்கள் உடனான உறவை வலுப்படுத்தவும் ரயில் சேவை முக்கியமானது,” என்றார் அஸ்வினி வைஷ்ணவ்.

குறிப்புச் சொற்கள்