புதுடெல்லி: இந்தியா, பிரேசில் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது.
இரு நாடுகளும் சுரங்க மற்றும் கனிமவளங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
எஃகு மூலப்பொருளை அதிக அளவு உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளில் பிரேசிலும் ஒன்று. மேலும், எஃகு உற்பத்திக்குத் தேவைப்படும் முக்கியமான கனிமங்களை அது அதிகம் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் எஃகு உற்பத்திக்கும், தொழில்நுட்பத் துறையின் தேவையைப் பூர்த்தி செய்யவும் உடன்பாடு உறுதுணையாக இருக்கும் என்று இந்திய அரசாங்க அறிக்கை தெரிவித்தது.
பிரேசிலுடனான ஒத்துழைப்பின் மூலம் ஆய்வு, சுரங்கம் மற்றும் எஃகுத் துறை உள்கட்டமைப்பில் முதலீட்டை ஈர்ப்பதில் கவனம் செலுத்த முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
இந்தியா, 218 மில்லியன் மெட்ரிக் டன் எஃகு உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்மயமாக்கத்தால் அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய நிறுவனங்கள் உற்பத்தியை விரிவுபடுத்துகின்றன.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா தலைமையிலான பேராளர் குழுவைச் சந்தித்த திரு மோடி, இந்தியா-பிரேசில் வர்த்தகப் பங்காளித்துவத்தை ஆழப்படுத்துவதற்கான வழிகளில் பேச்சுவார்த்தை கவனம் செலுத்தியதாகக் கூறினார்.
“அடுத்த மேலும் ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் டாலருக்கு இருதரப்பு வர்த்தகத்தைப் பெருக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது இருநாடுகளுக்கு இடையே 15 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
“தொழில்நுட்பம், புத்தாக்கம், மின்னிலக்கப் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, கணினிச் சில்லு உள்ளிட்ட துறைகளில் எங்கள் நாடுகள் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது,” என்றார் திரு மோடி
இந்தியாவும் பிரேசிலும் 2006ஆம் ஆண்டிலிருந்து வர்த்தகம், தற்காப்பு, எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம், அரிய கனிமங்கள், தொழில்நுட்பம், மின்னிலக்க உள்கட்டடைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி உத்திபூர்வ பங்காளிகளாக விளங்குகின்றன.

