இந்தியப் பெருங்கடலில் புதிய ராணுவ விமானத்தளம்; இந்தியா அதிரடி

அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க முயற்சி

இந்தியப் பெருங்கடலில் புதிய ராணுவ விமானத்தளம்; இந்தியா அதிரடி

2 mins read
e4d78def-8d58-4d14-a182-0603acbb6c66
கிரேட் நிக்கோபார் தீவில் புதிய ராணுவ விமானத்தளம் அமையவுள்ளது.  - படம்: புளூம்பெர்க்

புதுடெல்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரூ.15,0000 கோடி ($2.08 பில்லியன்) செலவில் புதிய ராணுவ விமானத்தளம் ஒன்றை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அத்துடன், அங்கு தற்போதுள்ள இரண்டு ராணுவ விமான ஓடுபாதைகளை விரிவுபடுத்தவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தீவுக்கூட்டத்தின் தென்கோடிப் பகுதியான கிரேட் நிக்கோபார் தீவில் இந்தப் புதிய ராணுவ விமானத்தளம் அமையவுள்ளது. இது உலகிலேயே மிக முக்கியமான கடல்வழிப் போக்குவரத்துப் பாதையான மலாக்கா நீரிணையிலிருந்து வெறும் 74 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இத்திட்டம் குறித்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைமை நிர்வாகி தேவேந்திர குமார் ஜோஷி கூறுகையில், “மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுள்ள இத்திட்டத்தைப் பாதுகாப்பு அமைச்சு முன்னின்று நடத்தும். இன்னும் மூன்று ஆண்டுகளில் இங்கிருந்து முதல் விமானச் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

உலக வணிகத்தில் மூன்றில் ஒரு பகுதியும், சீனாவின் எரிசக்தி இறக்குமதியில் பெரும்பகுதியும் மலாக்கா நீரிணை வழியாகவே நடைபெறுகின்றன. இந்த முக்கியப் பாதையில் இந்தியக் கடற்படை தனது பிடியை வலுப்படுத்துவது, இந்தோ பசிபிக் வட்டாரத்தில் சீனாவுக்குக் கடுமையான சவாலாக அமையும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான ஸ்ரீ விஜய புரம் (முன்னர் போர்ட் பிளேர்) உட்பட இரண்டு இடங்களில் உள்ள விமானத்தள ஓடுபாதைகளும் மேம்படுத்தப்படவுள்ளன. தீவுக்கூட்டத்தின் வடகோடியில் உள்ள ஒரு ராணுவத் தளமும் சீரமைக்கப்பட்டு, பெரிய வகை விமானங்கள் இறங்கும் வகையில் அதன் ஓடுபாதை விரிவுபடுத்தப்படும்.

அமெரிக்கத் தயாரிப்பான நீண்டதொலைவுக் கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இயக்குவதற்கு ஏதுவாக இந்தக் கட்டமைப்புகள் வடிவமைக்கப்படுகின்றன.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், இந்தியாவின் இந்த முயற்சியைச் சீனாவிற்கு எதிரான ஒரு வலிமையான அரணாகக் காண்கின்றன.

குறிப்புச் சொற்கள்