புதுடெல்லி: இந்திய ராணுவத்திற்கு அமெரிக்காவிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.292 கோடி மதிப்பில் 60 ‘ஜாவெலின்’ ரக பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆயுதப் படைகளின் அவசரகால கொள்முதல் அதிகாரத்தின்கீழ் இந்த அதிநவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) கையெழுத்திட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவ விற்பனைச் செயல்முறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், இதை இரு நாடுகளின் பாதுகாப்பு உறவில் ஒரு ‘மிகப்பெரிய முன்னேற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் குறிப்பிட்டதுபோல, எதிர்காலத்தில் இந்த ஆயுதங்களை இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்கு கதவு திறப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஒருவரே சுமந்து சென்று இலக்கை நோக்கி ஏவியவுடன் உடனடியாக அப்பகுதியிலிருந்து நகர்ந்துவிடக்கூடிய (Fire-and-forget) தொழில்நுட்பம் கொண்ட இந்த ஜாவெலின் ஏவுகணைகள், உலகில் பல்வேறு போர்களில் பயன்படுத்தப்பட்டுச் சோதிக்கப்பட்டவை ஆகும்.
அவசரகால கொள்முதல் விதிமுறைகளின்படி ஒரு குறிப்பிட்ட ஆயுதத்திற்கு அதிகபட்சமாக 300 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவிட முடியும் என்பதால், இவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாங்கப்படுகின்றன. இவற்றுடன் ‘எக்ஸ்காலிபர்’ ரக துல்லிய வெடிமருந்துகளையும் இந்தியா வாங்கி வருகிறது.
அதேவேளையில், இந்தியா தனது சொந்த தயாரிப்பிலும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கிச் சோதித்து வருகிறது. தற்போது 2026-27 நிதியாண்டின் இறுதிக்குள் அமெரிக்காவின் இந்த ஜாவெலின் ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


