இந்தியா எங்களை நூறு விழுக்காடு நம்பலாம்: டோனல்ட் டிரம்ப்

இந்தியா எங்களை நூறு விழுக்காடு நம்பலாம்: டோனல்ட் டிரம்ப்

2 mins read
a981971a-bfab-4ba3-9d35-822742681671
தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகர் என்று குறிப்பிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். - கோப்புப் படம்: சண்டே கார்டியன் லைவ்

புதுடெல்லி: இந்தியாவுக்கு எத்தகைய உதவி தேவைப்பட்டாலும் அதைச் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை இந்தியா நூறு விழுக்காடு நம்பலாம் என்றும் அமெரிக்க 250 சுதந்திர தின விழாவில் பங்கேற்றபோது அவர் குறிப்பிட்டார்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்த விழாவின்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் ஆகியோருடன் அவர் தொலைபேசி மூலம் உரையாடினார்.

அப்போது, தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகர் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

“பிரதமர் மோடியிடம் நலம் விசாரித்து, நான் அவரது ரசிகர் என்பதைத் தெரியப்படுத்துங்கள். அமெரிக்கா மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. சிறப்பான பொருளியல், பங்குச் சந்தை என இந்தியா விரும்பும் அனைத்தும் எங்களிடம் உள்ளன,” என்றார் திரு டிரம்ப்.

உதவி தேவை எனும் சூழ்நிலை ஏற்படும்போது யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும் என்று குறிப்பிட்ட அவர், இந்தியா நிச்சயம் அமெரிக்காவைத் தான் அழைக்கும் என்றார்.

இதையடுத்து, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கூட்டுச் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உத்திபூர்வ பங்காளித்துவத்தை எடுத்துரைத்த திரு மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அபாரமாகச் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் அறிவார்ந்த மனிதர் என்றும் பாராட்டினார்.

உலகளாவியப் பயங்கரவாத வலையமைப்புகளால் இரு நாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதன் விளைவாகவே, பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒரு வலுவான கூட்டணி உருவானது என்றார்.

மேலும், தொழில்நுட்பம், புத்தாக்கம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு பேணப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், 21ஆம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பங்களால் உருவாகும் வாய்ப்புகளையும் அபாயங்களையும் சமநிலைப்படுத்துவதில் இரு நாடுகளும் ஒத்த கருத்துடன் உள்ளதாகக் கூறினார்.

பயங்கரவாதம் என்பது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு பொதுவான சவாலாகவே நீடிக்கிறது என திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்