டொரோண்டோ: இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பொருளியல் உறவுகளை மேம்படுத்தும் வகையில், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் விரிவான பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தை (CEPA) நிறைவு செய்ய இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன.
அத்துடன், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாக இரு தரப்பும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
கனடாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயினுடன் இணைந்து டொரோண்டோவில் நடைபெற்ற முதலாவது இந்திய-கனடா நிதி அமைச்சர்கள் பொருளியல், நிதி உரையாடலில் பங்கேற்றார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கனடாப் பிரதமர் மார்க் கார்னியும் மேற்கொண்ட சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த உரையாடல் அமைந்தது.
தற்போது ரூ.70,354 கோடியாக (US$8 பில்லியன்) உள்ள இருதரப்பு வணிகத்தை, 2030ஆம் ஆண்டிற்குள் ரூ4.65 லட்சம் கோடியாக (70 பில்லியன் கனடா டாலர்) அதிகரிக்க இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.
உலகளாவிய பொருளியல் சவால்களுக்கு மத்தியில் இருதரப்பு உறவுகளே அதிகப் பலனளிக்கும் எனச் செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பசுமை அமோனியா, ஹைட்ரஜன், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் கனடாவின் ஓய்வூதிய நிதியத்தையும், நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்யவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவில் நீண்டகால முதலீட்டுக்குச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 74 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதையும், 2047ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற அரசின் இலக்கையும் அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனை, வணிகக் கட்டணங்களின் நிலவரங்களை ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பங்குதாரர்கள் இடையிலான ஒத்துழைப்பை ஆதரிப்பதற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், இருதரப்பு வணிகம், சுற்றுலா, கல்வி, சிறிய-நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கனடாவில் யுபிஐ கட்டணச் சேவையை விரிவாக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
நிதித் தொழில்நுட்பம் (ஃபின்டெக்), மூலதனச் சந்தை மேம்பாடு, நிதிசார் குற்றத் தடுப்பு, தூய்மையான எரிசக்திக்கான முக்கியத் தனிமங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.


