தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெஸ்லாவுக்காக மின்சார வாகனக் கொள்கையை மாற்ற இந்தியா திட்டம்

2 mins read
181d2324-028b-4f88-bc86-058924a2bb99
இந்தியப் பிரதமர் மோடியுடன் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’ இவ்வாண்டிறுதியில் இந்தியாவில் கால் பதிக்கவுள்ளது.

டெஸ்லாவின் இச்செயல் அமெரிக்காவை உதாசீனப்படுத்துவது போல் உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் முன்னிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

அதனால், தனது அணுகுமுறையில் சில மாற்றத்தை ‘டெஸ்லா’ நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் முதலில் விலையுயர்ந்த கார்களை அறிமுகப்படுத்திய பிறகு, மலிவான கார்களை இறக்குமதி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக, பெர்லினில் உள்ள ஜிகா தொழிற்சாலையிலிருந்து முழுமையாக கட்டமைக்கப்பட்ட ‘டெஸ்லா ஒய்’ ரக கார்களை இறக்குமதி செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

புனே பகுதியில் அலுவலகமும் மும்பையில் இருக்கும் பாந்த்ரா-குர்லா வளாகம் மற்றும் புதுடெல்லியில் உள்ள ஏரோசிட்டியில் கார்களுக்கான காட்சிக்கூடங்களையும் அமைக்க ‘டெஸ்லா’ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காட்சிக்கூடத்திற்கான இடங்களைத் தேடி வருவதுடன் தனது நிறுவனத்திற்கு இந்தியாவில் பணிபுரிய ‘லிங்ட்இன்’ மூலம் ஆட்சேர்க்கும் நடவடிக்கையிலும் அது தீவிரமாக இறங்கியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனச் சந்தை 100 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயுடன் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, புதிய மின்சார வாகனக் கொள்கையைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசு அறிவித்தது.

சில நிபந்தனைகளுடன் சுங்க வரியை 15 விழுக்காடாகவும் அது குறைத்தது.

இந்தப் புதிய மின்சார வாகனக் கொள்கை எலான் மஸ்க் மற்றும் பிற வாகன உற்பத்தியாளர்கள் இந்திய மின்சார வாகனச் சந்தையில் நுழைவதற்கு வழி வகுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தியாவில் ‘டெஸ்லா’ நிறுவனம் நுழைவதை அனைவரும் கூர்ந்துகவனித்து வரும் நிலையில், மின்சார வாகனக் கொள்கையில் மாற்றம் செய்ய பல தானியங்கி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசாங்கம் கருத்து எதிர்பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட மின்சார வாகனக் கொள்கை மார்ச் மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என முன்னுரைக்கப்படும் நிலையில், அதற்குப் பிறகு அரசாங்கம் மின்சார வாகன இறக்குமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கும்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒப்புதல்கள் அளிக்கப்பட்டு விரைவில் இறக்குமதிகள் தொடங்கும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் கூறியது.

‘டெஸ்லா’ போன்ற நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியில், மாற்றியமைக்கப்பட்ட மின்சார வாகனக் கொள்கை, இரண்டாவது ஆண்டிலேயே ரூ.2,500 கோடி வருவாயைக் காட்ட கார் தயாரிப்பாளர்களைக் கட்டாயப்படுத்தக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3.8 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. வாகனத்தை இயக்கத் தயார்படுத்தும் சாதனத்தின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறால் இக்கார்களை டெஸ்லா திரும்பப் பெறுகிறது. வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததைக் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ‘டெஸ்லா’ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்