புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச எல்லையில் அண்மையில் உருவான மோதல் சூழலுக்குப் பிறகு, இந்தியா-சீனா இடையேயான 10 நாள் ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நிலைமை சீரடைந்துள்ளது.
மேற்கே லடாக்கில் தொடங்கி கிழக்கே அருணாச்சலப் பிரதேசம் வரை இருநாடுகளுக்கிடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.
கடந்த 2020ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நேருக்கு நேர் மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
கிழக்குப் பகுதியில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெக்மஹான் கோட்டை இந்தியா எல்லையாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், சீனா அதை நிராகரித்து அப்பகுதி முழுவதையும் ‘தெற்கு திபெத்’ என்று உரிமை கோரி வருகிறது.
அண்மையில், மேல் சுபான்ஷிரி மாவட்டத்தின் தாக்சிங், அசாபிலா, மஜா ஆகிய பகுதிகளில் இந்திய, சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. மீண்டும் ஒரு பெரிய மோதல் ஏற்படுவதைத் தடுக்க அருணாச்சலில் இரு நாடுகளின் ராணுவத் தளபதிகள் தலைமையில் 10 நாள்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், மோதல்களைத் தவிர்ப்பதற்கான புதிய செயல்பாட்டு வழிமுறைகள் இரு நாட்டு வீரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், சர்ச்சைக்குரிய ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுற்றுக்காவல் செல்வதற்கான வரம்பு குறித்து இன்னும் முழுமையான உடன்பாடு எட்டப்படவில்லை.
இதுதொடர்பாக இருநாடுகளும் தங்கள் உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளன. எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து உலக அளவில் கவனம் பெற்று வருகின்றன.
