புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் அதன் எல்லைப் பகுதிக்கான உரிமையை விட்டுக்கொடுக்காமல் இருப்பது, இறையாண்மை, சுய ஆட்சி முறை, சுதந்திரம் ஆகியவற்றுக்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக இந்தியா மறுவுறுதிப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் பூசல் மோசமடைந்துவரும் நிலையில் வியாழக்கிழமை (அக்டோபர் 16) இந்தியா இவ்வாறு கூறியது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பூசலைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜைஸ்வால் கூறினார் என்று ஏஷியா நியூஸ் நெட்வோர்க் ஊடகம் தெரிவித்தது. புதுடெல்லியில் வாரந்தோறும் நடக்கும் செய்தியாளர்க் கூட்டத்தில் அவர் பேசினார்.
“மூன்று அம்சங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒன்று, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு இடம் கொடுத்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது. இரண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளுக்கு அண்டை நாடுகளைக் குறைகூறுவது பாகிஸ்தான் பல காலமாக செய்யும் ஒன்று. மூன்று, ஆப்கானிஸ்தான் அதற்குச் சொந்தமான பகுதிகளுக்கு உரிமை கொண்டாடுவது பாகிஸ்தானுக்குப் பொறுக்கவில்லை,” என்றார் அவர்.
“ஆப்கானிஸ்தான் தனது இறையாண்மை, தனது எல்லைப் பகுதிகளுக்கான உரிமையை விட்டுக்கொடுக்காமல் இருப்பது, அந்நாட்டு சுதந்திரம் ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்து முழு ஆதரவளிக்கிறது,” என்று திரு ரந்தீர் ஜைஸ்வால் கூறினார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்போது செயல்பட்டுவரும் தங்களின் செயல்பாட்டுக் குழு விரைவில் இந்தியத் தூதரகமாக உருவெடுக்கும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. காபூலில் தாங்கள் புதிய தூதரகத்தைத் திறக்கப்போவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சென்ற வாரம் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கியிடம் கூறியிருந்தார்.
காபூலில் இந்தியத் தூதரகம் திறப்பது குறித்து கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த திரு ரந்தீர் ஜைஸ்வால், 2022ஆம் அண்டு ஜூன் மாதத்திலிருந்து காபூலில் செயல்பட்டுவரும் இந்திய செயல்பாட்டுக் குழு இன்னும் சில நாள்களில் தூதரகமாக உருவெடுக்கும் என்று குறிப்பிட்டார்.