புதுடெல்லி: பதினாறு வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது போன்று, இந்தியாவிலும் அப்படி வயது சார்ந்த கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இத்தகவலை அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) வெளியிட்டார்.
“வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதைப் பல நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன,” என்று இந்தியாவில் நடந்துவரும் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தாக்க உச்சநிலை மாநாட்டின்போது செய்தியாளார்களிடம் அவர் கூறினார்.
வன்போலிகள் (deepfakes), பல்வேறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வயது அடிப்படையில் கட்டுப்பாடு விதிப்பது போன்றவை குறித்து ஆலோசித்து வருவதாகத் திரு வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
டிக்டாக், யூடியூப், ஸ்னாப்சேட் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்கள் 16 வயதிற்குட்பட்டோரின் கணக்குகளை நீக்க வேண்டும் என்றும் இல்லையேல் கடுமையான அபராதத்தை எதிர்நோக்கலாம் என்றும் கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா அறிவித்தது.
இந்நிலையில், வன்போலி உள்ளடக்கங்களுக்கு எதிராக வலுவான சட்டம் தேவை என்று திரு வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
“நாளுக்கு நாள் அந்தச் சிக்கல் பெரிதாகி வருவதாகக் கருதுகிறேன். அதனால், அத்தகைய தீங்குகளிலிருந்து நம் பிள்ளைகளையும் சமுதாயத்தையும் காக்க வேண்டியுள்ளது,” என்றார் அவர்.
முன்னதாக, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை முறைப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை இந்தியா கடந்த வாரம் கடுமையாக்கியது. அதன்படி, ஏஐ உள்ளடக்கங்கள் பற்றி சமூக ஊடகங்கள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்; அதிகாரிகள் கேட்டுக்கொண்டால் மூன்று மணி நேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும்.

