அமெரிக்காவுக்குப் பதிலடி தர இந்தியா ஆலோசனை

2 mins read
01433b7a-141b-41cb-b51b-2aaeec4147e5
எஃகு, அலுமினியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (நடுவில்) அண்மையில் இரட்டிப்பாக்கினார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: அமெரிக்கா இறக்குமதி செய்யும் எஃகு, அலுமினியப் பொருள்களுக்கு வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பின் மூலம் இந்தியா அறிக்கை விடுத்தது.

கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி விடுக்கப்பட்ட அந்த அறிக்கையை அமெரிக்கா நிராகரித்தது.

வா‌ஷிங்டனின் நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி தர பரிந்துரைத்து அந்த அறிக்கை விடுக்கப்பட்டது. தங்களின் நடவடிக்கைகள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டவை அல்ல என்றும் அதன் தொடர்பில் தாங்கள் புதுடெல்லியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்றும் வா‌ஷிங்டன் கூறியதாக தகவல் தெரிந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) கூறினர்.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளைத் தற்காலிகமாக விலக்கி இந்தியா பதிலடி தரக்கூடும் என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் உலோகங்களுக்கான வரிகளை இந்தியா உயர்த்தக்கூடும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறினர். அவர்கள் தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் எல்லா எஃகு, அலுமினியப் பொருள்களுக்கும் 25 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முடிவெடுத்தது.

பிறகு கடந்த மே மாதம் 30ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் அந்த விகிதத்தை 50 விழுக்காட்டுக்கு உயர்த்தியது. தேசியப் பாதுகாப்புக்காக அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் உலோகத் துறைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவுக்குத் தாங்கள் வழங்கும் எல்லாச் சலுகைகளையும் தற்காலிகமாக ரத்து செய்யக்கூடும் என்று இந்தியா மே ஒன்பதாம் தேதி உலக வர்த்தக அமைப்பின் மூலம் எச்சரிக்கை விடுத்தது.

அவ்வாறு எச்சரிக்கை விடுத்து 30 நாள்களுக்குப் பிறகு அந்தப் பதில் நடவடிக்கையைத் தாங்கள் எடுக்கக்கூடும் என்று இந்தியா குறிப்பிட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த அமெரிக்கா, இந்தியா பரிந்துரைத்துள்ள பதில் நடவடிக்கை பலதரப்பு வர்த்தக விதிமுறைகளுக்கு இணங்காதது என்று மே 22ஆம் தேதியன்று உலக வர்த்தக அமைப்பிடம் விளக்கமளித்தது.

குறிப்புச் சொற்கள்