உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய-அமெரிக்க உறவு: ஜெய்சங்கர்

உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய-அமெரிக்க உறவு: ஜெய்சங்கர்

2 mins read
d1d3e2ec-3b37-4412-a58d-8d7860ce4435
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியாவும் அமெரிக்காவும் ஆழமான, உலகளாவிய, உத்திபூர்வ பங்காளித்துவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை அவர் புதுடெல்லியில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவானது, அவ்விரு நாடுகளை மட்டுமல்லாமல், உலகின் மற்ற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இவ்விரு நாடுகளின் உறவு உலகின் மற்ற பகுதிகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது என்றார் அவர்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல பிரச்சினைகளிலும் இரு நாடுகளுக்கும் பொதுவான நிலைப்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்த திரு ஜெய்சங்கர், சிக்கலான இக்காலகட்டத்தில் இரு தரப்பும் வெளிப்படையான, ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

மே 26ஆம் தேதி நடைபெறவுள்ள குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் திரு மார்கோ ரூபியோ.

இக்கூட்டத்தில் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடி, மார்கோ சந்திப்பு

இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் திரு மார்கோ ரூபியோ, புதுடெல்லியில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அண்மைக்காலத்தில் இருதரப்பில் மேற்கொள்ளப்பட்ட உத்திபூர்வப் பங்காளித்துவ நடவடிக்கைகள் மூலம் எந்த அளவுக்கு உறவுகள் மேம்பட்டுள்ளன என்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.

மேலும், நீடித்த முன்னேற்றம், வட்டார விவகாரங்கள், உலக அமைதி, பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இருவரும் கலந்தாலோசித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்தியாவும் அமெரிக்காவும் உலக நலனுக்காகத் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ள நிலையில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, கல்வி, மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து திரு மார்கோ ரூபியோ இந்தியப் பிரதமருக்கு விளக்கியதாக பிரதமர் அலுவலகம் வெயிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கு நிலவரம் பல்வேறு வட்டார-உலகளாவிய விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் திரு ரூபியோ விவரித்ததாக இந்த அறிக்கை குறிப்பிட்டது.

அமைதி முயற்சிகளுக்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்ற தனது நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும், அரசு தந்திரங்கள் மூலம் மோதல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்