நியூயார்க்: இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் மார்கோ ரூபியோ திங்கட்கிழமை (செப்டம்பர் 22) சந்திப்பு நடத்தினார்
“இரு நாடுகளிலும் வளத்தை உருவாக்குவதற்கு வணிகம், எரிசக்தி, மருந்துகள், முக்கியமான தாதுக்கள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள்குறித்து விவாதித்தோம், இருதரப்புப் பங்காளித்துவத்தின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தினோம்,” என்று எக்ஸ் சமூக ஊடகத்தளத்தில் திரு ரூபியோ பதிவிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமானது என்று வருணித்த எஸ் ஜெய்சங்கர், நீடித்த ஈடுபாட்டின் முக்கியத்துவத்தைச் சுட்டினார்.
“இருநாட்டு உறவுகள், அனைத்துலக விவகாரங்கள்குறித்து விவாதித்தோம். முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள்குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்,” என்று எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியா, அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது என்பதை அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. பரஸ்பர நலன்களிலும் முக்கிய துறைகளிலும் இந்தியா தொடர்ந்து ஈடுபடுவதை அது வரவேற்றது.
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து சுதந்திரமான, தாராளமயமான இந்தோ-பசிபிக் வட்டாரத்தை ஊக்குவிக்க ‘குவாட்’ உள்ளிட்ட அமைப்புகளின் வழி தொடர்ந்து பாடுபட ஜெய்சங்கரும், ரூபியோவும் உடன்பட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
இருநாடுகளுக்கும் இடையே வணிகப் பதற்றம் அதிகரித்ததற்கு பின்னர், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் முதல் முறையாக நேரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜூலையில் வாஷிங்டனில் நடைபெற்ற 10வது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின்போது இருவரும் கடைசியாகச் சந்தித்தனர்.
இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இச்சந்திப்பு கருதப்படுகிறது.