கோல்கத்தா: பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் நீதிமன்ற விசாரணையை வேகமாகக் கையாள ஆயிரக்கணக்கான நீதிமன்றங்களை அமைக்கும் இலக்கை இந்தியா கொண்டிருந்தது.
அந்த இலக்கு இப்போது குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், அந்த இலக்கில் பெரிதும் பின்தங்கி இருப்பது அதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில்தான் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டது நாடெங்கும் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.
மூன்று மத்திய அரசாங்க அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பார்த்த ஆவணம் ஒன்றிலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாலியல் குற்றங்களுக்கான நீதிமன்ற விசாரணையைத் துரிதப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் 2019ஆம் ஆண்டில் சிறப்புத் துரித நீதிமன்றங்களை (FTSCs) அமைக்க நடவடிக்கை எடுத்தது. மாநில அரசாங்கங்கள், பாதிக்கப்பட்டோருக்கு வேகமாக நீதி வழங்குவதில்லை என்று மத்திய அரசாங்கம் சாடியதைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறிப்பாக மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை மத்திய அரசாங்கம் சாடியது. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குவதில் அம்மாநிலங்கள் அளவுக்கதிகமான நேரம் எடுத்துக்கொள்வதாக மத்திய அரசாங்கம் குறைகூறியது.
இந்தியாவில் பெரும்பாலான பாலியல் குற்ற வழக்குகளுக்கான நீதிமன்ற விசாரணையை, ஏற்கெனவே பல வழக்குகளைக் கையாள்வதால் பெரும் சுமையை எதிர்கொள்ளும் மாவட்ட நீதிமன்றங்கள் மேற்கொண்டு வருகின்றன.
பிரச்சினையைக் கையாள திரு மோடியின் அரசாங்கம், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1,023 சிறப்புத் துரித நீதிமன்றங்களை அமைக்க மாநில அரசாங்கங்களுக்கு சலுகை வழங்கத் திட்டமிட்டிருந்தது. அதன்படி மாநில அரசாங்கங்கள் செய்யும் செலவில் 60 விழுக்காட்டை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு சிறப்புத் துரித நீதிமன்றத்திலும் ஒரு நீதிபதியையும் ஏழு ஊழியர்களையும் வேலைக்கு எடுப்பது திட்டம்.
2026ஆம் ஆண்டுக்குள் 2,600 சிறப்புத் துரித நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த இலக்கு இப்போது 790க்குக் குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் அதிக அக்கறை காண்பிக்காமல் இருப்பது, போதுமான நீதிபதிகள் இல்லாமல் இருப்பது ஆகியவை அதற்கான காரணங்கள் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியதோடு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கண்ட ஆவணத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி இந்தியா முழுவதும் 752 சிறப்புத் துரித நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களின் பார்வைக்காக இருக்கும் அரசாங்கப் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.