புதுடெல்லி: அமெரிக்கத் தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் இதனை இந்தியா தெரிவித்துள்ளது.
முன்னதாக சீனா, இந்தியா, கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல்வேறு நாடுகளுக்குக் கூடுதல் இறக்குமதி வரியை அமெரிக்கா அறிவித்தது. இந்தியாவுக்கு 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கான பேச்சுவார்த்தைகளில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இரு நாடுகளுக்கு இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்த மே 12ஆம் தேதியிட்ட ஆவணத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் சில பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனங்களான புளூம்பெர்க்கும் ராய்ட்டர்சும் செய்தி வெளியிட்டுள்ளன.
“அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்தி வைப்பது அல்லது அவற்றின் மீதான வரிகளை அதிகரிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில், எவ்வகைப் பொருள்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என்பது பற்றி அதில் கூறப்படவில்லை. இது, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தியாவின் முதல் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

