புதுடெல்லி: தேவையான தொலைத்தொடர்புக் கருவிகளை இறக்குமதி செய்தபோது வரிஏய்ப்பு செய்ததால் சாம்சுங் நிறுவனமும் இந்தியாவிலுள்ள அதன் நிர்வாகிகளும் வரியாகவும் தண்டத்தொகையாகவும் 601 மில்லியன் அமெரிக்க டாலர் (S$803 மில்லியன்) செலுத்த வேண்டும் என்று இந்தியா கேட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்ற 2024ஆம் ஆண்டில் சாம்சுங் நிறுவனம் இந்தியாவில் 955 மில்லியன் அமெரிக்க டாலர் லாபம் ஈட்டியது.
இந்நிலையில், அதில் குறிப்பிட்ட பங்கை இந்தியா வரியாகச் செலுத்தச் சொல்கிறது. அதனை எதிர்த்து வரி தீர்ப்பாயத்திடமோ சட்ட அடிப்படையிலோ முறையிடவும் சாம்சுங் நிறுவனங்களுக்கு உரிமையுண்டு என்று ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு, 10%-20% வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், கைப்பேசிக் கோபுரக் கட்டமைப்பிற்குத் தேவையான அலைபரப்புக் கருவியை இறக்குமதி செய்ததைத் தவறாக வகைப்படுத்தியதற்காக சாம்சுங் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் அக்கருவிகள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்தக் கருவிகள் வரிவிலக்கு பெற்றவை எனக் குறிப்பிட்டு, தங்கள் விசாரணையைக் கைவிடும்படி இந்திய வரித்துறை அதிகாரிகளை இணங்க வைக்க முயன்றதாகவும் கூறப்பட்டது.
ஆயினும், சாம்சுங் நிறுவனத்தின் கோரிக்கைகளை இந்திய அதிகாரிகள் ஏற்கவில்லை என்பது கடந்த ஜனவரி 8ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்மூலம் தெரியவந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.
சாம்சுங் நிறுவனம் இந்திய ஒழுங்குவிதிகளை மீறிவிட்டது என்றும் தெரிந்தும் வேண்டுமென்றே பொய்யான ஆவணங்களைச் சுங்கத்துறையிடம் சமர்ப்பித்தது என்றும் சுங்கத்துறை ஆணையர் சோனல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், செலுத்தாத வரிகளையும் அதற்கான 100% தண்டத்தொகையையும் சேர்த்து, ரூ.4,460 கோடியைச் (520 மில்லியன் அமெரிக்க டாலர்) செலுத்த வேண்டும் என்றும் சாம்சுங் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தியாவிலுள்ள அதன் ஏழு நிர்வாகிகள் 81 மில்லியன் அமெரிக்க டாலர் தண்டத்தொகையை எதிர்நோக்குவதாகவும் அச்செய்தி தெரிவித்துள்ளது.