புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை ஆதரிக்கும் வகையில் கனடாவில் வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்தி குறித்து இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது.
கனடாவின் நடவடிக்கைகளால், உறவு பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
“பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கும், கனடா வழங்கும் ஆதரவு பற்றி பெரிய பிரச்சினை உள்ளதாகக் கருதுகிறேன். இது இந்தியா - கனடா உறவுக்கு நல்லது அல்ல,” என்று அவர் கூறினார்.
‘ப்ளூ ஸ்டார் ஆப்பரேசன்’ 40வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கனடாவின் பிராம்ப்டன் நகரில், முன்னாள் பிரதமர் இந்திராவை அவரது பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றதைச் சித்திரித்து அலங்கார ஊர்தி ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
அதில் உள்ள இந்திரா காந்தி உருவத்தின் பின்புறம் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டியில், 1984 அக்டோபர் 31ல் நடந்ததற்கு வழங்கப்பட்ட தண்டனை என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில், கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் புகைப்படமும் உள்ளது. மேலும், அந்தச் சுவரொட்டியில் பிரதமர் மோடி புகைப்படத்துடன், தண்டனை காத்திருக்கிறது என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் வான்கூவர் நகரில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின் போதும், இதே போன்ற சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கனடா அரசிடம் தூதரக ரீதியில் புகார் அளிக்கப்பட்டது.
“வன்முறை, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பொது வெளியில் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது கனடா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் இத்தகைய வெறுப்பு பிரசாரத்தினால், அச்சுறுத்தப்படுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக கனடாவில் இந்த நிகழ்வு மீண்டும், மீண்டும் நடக்கிறது. இதனை தடுக்க கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியுள்ளார்.
“மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை ஆதரித்து நடந்த நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது. பிரிவினைக்கும், வன்முறையை புகழ்வதற்கும் கனடாவில் இடம் இல்லை. இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்,” என்று இந்தியாவிற்கான கனடாவின் தூதர் கேமரூன் மெக்கே கூறியுள்ளார்.

