இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 16,000 வெளிநாட்டினரை அந்நாட்டு உள்துறை அமைச்சு சொந்த நாட்டுக்கு அனுப்பவிருக்கிறது.
பங்ளாதேஷ், பிலிப்பீன்ஸ், மியன்மார், மலேசியா, கானா, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
போதைப்பொருள் தொடர்பில் இந்திய அதிகாரிகள் மேற்கொண்ட ஆகப் பெரிய அளவிலான சோதனை நடவடிக்கை அது என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
நாடுகடத்தப்படுபவர்கள் போதைப்பொருள் கடத்தல் முதல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அவற்றைக் கொண்டுசெல்வது வரையிலான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அத்தகையோர் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள தடுப்புக் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர் பட்டியல் உள்துறை அமைச்சிடமும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
புதிய குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுபப்படுவர்.
இவ்வாண்டு ஏப்ரல் 4ஆம் தேதி குடிநுழைவு, வெளிநாட்டினர் மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அதிபர் திரௌபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய சட்டத்தின்கீழ் கடப்பிதழ்கள், விசாக்கள், குடிநுழைவு சம்பந்தப்பட்ட நடைமுறைகள்மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகியவை வெளிநாட்டினர் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும். மேலும் சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளம் கண்டு அவர்களை நாடுகடத்த குடிநுழைவுப் பிரிவுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.
சுற்றுலா, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வர்த்தகம் ஆகியவற்றுக்காக வரும் சுற்றுப்பயணிகளை இந்தியா வரவேற்கிறது என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா ஒரு தர்மசாலையன்று என்று மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது நாடாளுமன்றத்தில் கூறினார்.