தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்தாண்டுகளில் 50 விமான நிலையங்களை மேம்படுத்த இந்தியா திட்டம்

2 mins read
8ed60d66-133f-4c8b-99dc-6efb57ba566f
இந்தியாவில் இப்போது 159 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதுடெல்லி: நாட்டின் விமானத் துறைக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில் 50 விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்களை இந்திய அரசு முன்னெடுக்கவுள்ளது.

புதிய விமான நிலையங்களை அமைப்பதும் அதிலடங்கும்.

இப்போது, இந்தியாவில் 159 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டில் 74 விமான நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானத்துறைக் கட்டமைப்பை முழுமையான வகையில் மேம்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொது விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் வும்லுன்மாங் வுவால்னம் புதன்கிழமை (ஏப்ரல் 16) தெரிவித்தார்.

அதன்படி, விமான நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் விமானப் பணிப் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் 50 விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளைப் பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து மேற்கொள்வதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் திரு வுவால்னம் குறிப்பிட்டார்.

அத்துடன், விமான நிலையத் திட்டப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதிலும் மேம்பட்ட நடைமுறை கையாளப்படும் என்றும் அவர் சொன்னார்.

விமான நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலத்தை உரிய மாநில அரசுகளே வழங்க வேண்டும்.

தலைநகர் புதுடெல்லியில் அனைத்துலக விமான நிலையங்கள் மன்ற (ஏசிஐ) ஆசிய பசிபிக், மத்தியக் கிழக்கு வட்டாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

ஏசிஐ அமைப்பானது விமான நிலையங்களைப் பிரதிநிதிக்கிறது.

இவ்வட்டாரத்தில் விமான நிலையங்களை மேம்படுத்தவும் புதிய விமான நிலையங்களை அமைக்கவும் 420 பில்லியன் அமெரிக்க டாலர் (S$552 பில்லியன்) நிதி தேவைப்படுகிறது என்று ஏசிஐ ஆசிய பசிபிக், மத்தியக் கிழக்கு அமைப்பு நடத்திய பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

வேகமாக வளர்ந்துவரும் பொது விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்