புதுடெல்லி: பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகு, இந்தியா தனது முதல் உள்நாட்டு H5N1 பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளது. கோழிப் பண்ணைத் துறையில் தொடர்ந்து ஏற்படும் நோய்ப்பரவலைத் தடுக்கப் புதிய தடுப்பூசி பெரிய அளவில் உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. புதிய தடுப்பூசி, நாட்டில் பரவி வரும் அதிதீவிர நோய்க்கிருமியான பறவைக் காய்ச்சல் கிருமியிலிருந்து பாதுகாக்கும். அண்மைக் காலத்தில் பறவைக் காய்ச்சல் கருமி பாலூட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் பரவியுள்ளது. அத்துடன் சில மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, 24 மாநிலங்களில் 341 முறை பறவைக் காய்ச்சல் பரவியது. இதில் 284 சம்பவங்களுக்கு H5N1 கிருமியே காரணமாக அமைந்தது. போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான தேசிய உயர் பாதுகாப்பு நிறுவன அறிவியலாளர்களால் புதிய தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. அது கோழிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், பண்ணைகளை வலுப்படுத்துவதிலும் முக்கிய மைல்கல்லாக அமையும் என அதன் இயக்குநர் அனிகேத் சன்யால் தெரிவித்தார். பறவைக் காய்ச்சல் தீவிர நோயாகும். நோய்வாய்ப்பட்ட கோழிகளில் 100 விழுக்காடு இறப்பு ஏற்படலாம். பறவைக் காய்ச்சல் பாதிப்பின் போது பெரிய அளவில் கோழிகள் கொல்லப்படுவதால் பண்ணைகளுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் அனைத்துலக வர்த்தகமும் பாதிக்கப்பட்டு, கோழி சார்ந்த பொருள்களின் விலை அதிகரிக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.
பறவைக் காய்ச்சல் நோய் கட்டுக்கடங்காமல் பரவினால், நாட்டின் கோழியினங்களில் 20 விழுக்காடு ஆபத்தில் சிக்கும். மேலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 விழுக்காடு குறையக்கூடும்.
2006ஆம் ஆண்டு பரவிய பறவைக் காய்ச்சலால் இந்தியாவில் ரூ.3,000 கோடி வரையிலான இழப்பு ஏற்பட்டது.
