ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகரை ஒட்டிய அனைத்துலக எல்லைப் பகுதியில் ஆளில்லா வானூர்தி மூலம் கடத்த முயன்ற ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை வெள்ளிக்கிழமை (மே 23) இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
அங்குள்ள ஒரு திடல்பகுதியில் சந்தேகத்திற்குரிய பொருள் கிடந்ததைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக அதுபற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விரைந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், அந்த ஆளில்லா வானூர்தியைக் கைப்பற்றினர். அதனுடன் மஞ்சள் நிறப் பொட்டலம் ஒன்று இணைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர். அதில் ஒரு கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“அந்தப் போதைப்பொருள் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எல்லைப் பகுதியிலுள்ள முள்வேலிக்கு அருகே அது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று ஸ்ரீகங்காநகர் காவல்துறைக் கண்காணிப்பாளர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவ்வட்டாரத்தில் தனது நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படை விரிவுபடுத்தியுள்ளது. எல்லை தாண்டிய கடத்தல் முயற்சிகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைப்புகளும் அதிக விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் மூன்று முறை இவ்வகையில் இடம்பெற்ற ஹெராயின் கடத்தல் முயற்சிகளைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.