இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
இந்திய இளைஞர்கள் குறித்து நிகழ்ச்சி நெறியாளர் லிடியா போல்கிரீன் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.
ஆகக் கடுமையான வேலையின்மை, கல்வி முறையில் உள்ள ஆழமான சிக்கல்கள் காரணமாக மிகப்பெரிய பொருளியல் நெருக்கடியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.
“வெளிப்படையாகச் சொல்லப்போனால், இந்தியா ஒரு பொருளியல் பேரழிவின் விளிம்பில் அமர்ந்திருக்கிறது. அதுதான் நிதர்சனம். ஒருவர் இதை அலட்சியப்படுத்தலாம்.
“ஊடகங்கள் இதை ஒதுக்கித் தள்ளலாம். ஆனால் இந்தியாவில் மிகப்பெரிய வேலையின்மைப் பிரச்சினை உள்ளது. இந்தியாவின் கல்வி முறையிலும் மிகப்பெரிய பிரச்சினை உள்ளது,” என்று ராகுல் காந்தி கூறினார்.
தற்போதைய சூழல் குறித்து விரக்தியை வெளிப்படுத்தும் இளையர்களில் ஒரு பிரிவினர் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், முறைப்படி கல்வி கற்றவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இளையர்களிடையே நிலவும் இந்த விரக்திக்கு அடிப்படைக் காரணம், அவர்களுக்குத் தங்களது எதிர்காலம் குறித்து நம்பிக்கை இல்லாததே என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் பாஜகவிடமிருந்து கடுமையான பதிலடியைப் பெற்றுள்ளன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அந்நிய மண்ணில் நாட்டை அவமதிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர் என்றும் இந்தியாவை இழிவுபடுத்துவதற்காகவே வெளிநாடுகளுக்குச் செல்லும் அராஜகவாதி என்றும் பாஜக பேச்சாளர் கௌரவ் பாட்டியா விமர்சித்துள்ளார்.
“மிக மோசமான கருத்துகளைத் தெரிவிப்பதன்மூலம் ராகுல் காந்தி நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார். இத்தகைய முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற ஓர் எதிர்க்கட்சித் தலைவரை இந்தியா பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது,” என்று அவர் கூறியுள்ளார்.
