நியூயார்க்: வேகமாக வளரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளியல் 6.3% வளர்ச்சி பெறும் என்றும் ஐநா ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டுச் செலவுகள், அரசு முதலீடுகள், சேவைகள்-ஏற்றுமதி ஆகியவற்றால் இந்த வளர்ச்சி உந்தப்படுவது தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 6.4% வளர்ச்சியடையும் என்றும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தைவிட இந்தியப் பொருளியல் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி காணும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நடப்பு நிதியாண்டிலும் 6.3% வளர்ச்சி விகிதத்துடன், உலகில் வேகமாக வளரும் பொருளியலாக இந்தியா இருக்கும் என்கிறது ஐநா.
உலக அளவில் பொருளியல் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மையும் வர்த்தகப் பதற்றங்களும் அதிகரித்து வருவதால், உலகப் பொருளியல் சிக்கலான கட்டத்தில் உள்ளது என்றும் நிபுணர்கள் கணித்துள்ளதை ஐநா ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
“மற்ற பெரிய நாடுகளின் பொருளியலுடன் ஒப்பிடும்போது இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. சீனா 4.6%, அமெரிக்கா 1.6%, ஐரோப்பிய ஒன்றியம் 1%, ஜப்பான் 0.7% மட்டுமே வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், பணவீக்கம் நடப்பாண்டில் 4.3%ஆக குறைய வாய்ப்புள்ளது என்றும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவின் கணிக்கப்பட்ட வளர்ச்சி 6.6% என்பதாக இருந்தது. தற்போது அதில் இருந்து சற்றே குறைந்துள்ள போதிலும், மற்ற நாடுகளின் பொருளியலைவிட இந்தியா முன்னணியில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை என்கிறது ஐநா.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் இந்த அறிக்கையில் பல பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தனை சாதகமான அம்சங்கள் உள்ள போதிலும், இந்தியா, சில நெருக்கடிகளையும் எதிர்கொள்ளக்கூடும் என்றும் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதித் துறையைப் பாதிக்கக்கூடும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி குறித்த கண்ணோட்ட அறிக்கை ஒன்றை அனைத்துலக நாணய நிதியமும் (IMF) அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில், இந்தியப் பொருளியல் நடப்பு ஆண்டு 6.2% ஆகவும், அடுத்த ஆண்டு 6.3% ஆகவும் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.