வாரணாசி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதற்கான வேட்புமனுவை அவர் செவ்வாய்க்கிழமை (மே 14) தாக்கல் செய்தார். அப்போது, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.
வேட்புமனுவைத் தாக்கல் செய்யுமுன் பிரதமர் மோடி கங்கை ஆற்றங்கரையில் பூசை செய்தார். பின்னர் காலபைரவர் கோவிலுக்குச் சென்று அவர் வழிபட்டார்.
வாரணாசி தொகுதியில் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திரு மோடி 63.62 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, 674,664 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஷாலினி யாதவைத் தோற்கடித்தார்.
இந்நிலையில், இம்முறை உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், ஆம் ஆத்மி கட்சியின் ஷியாம் ரங்கீலா, பகுஜன் சமாஜ் கட்சியின் அதர் ஜமால் லாரி ஆகியோர் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் களமிறங்கியுள்ளனர்.
சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 14 பேர் அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையத் தகவல் தெரிவிக்கிறது.