தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா - ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் வர்த்தக ஒப்பந்தங்கள் மறுஆய்வு

2 mins read
f8e34064-2596-43b4-9777-6f3e68fe3079
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, பட்டத்து இளவரசர் ஷேக் காலிட்டைச் சந்தித்தார். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவிற்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை இரு நாட்டு அதிகாரிகள் மறுஆய்வு செய்யவுள்ளனர்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து இருந்து பல்வேறு விலை மதிப்புள்ள உலோகங்களை இறக்குமதி செய்வது அண்மைக் காலங்களில் திடீரென வெகுவாக அதிகரித்ததை அடுத்து, இந்தியத் தொழில்துறையினர் கவலை தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படுவதாக தகவலறிந்தவர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு, விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டன. அதற்கு முன்னதாக, அதுகுறித்து 88 நாள்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த ஒப்பந்தத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது.

இதற்கிடையே, இரு நாடுகளும் செய்துகொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின்படி, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது அல் நஹ்யான் தலைமையிலான ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அரசாங்கக் குழு அடுத்த வாரம் புதுடெல்லிக்கு வரவிருக்கிறது.

அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்திய வர்த்தக அமைச்சும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் பொருளியல் அமைச்சும் இந்த மறுஆய்வு நடவடிக்கை குறித்துக் கருத்துரைக்க மறுத்துவிட்டதாக ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

வர்த்தக ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படுவதை புதுடெல்லி விரும்புவதாக இந்திய அதிகாரிகள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபரின் மகன் ஷேக் காலிட், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த மறுஆய்வில் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

அந்நாட்டு தேசியத் துணைப் பாதுகாப்பு ஆலோசகரான அவர், ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி வந்தடைவார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுடன் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

குறிப்புச் சொற்கள்