இந்தியா: 414 தேசிய நினைவுச்சின்னப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு

இந்தியா: 414 தேசிய நினைவுச்சின்னப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு

1 mins read
71923bc4-192a-4299-95db-218465f4c7be
ஆக்கிரமிப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியக் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் தெரிவித்துள்ளார். - படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் மொத்தம் 3,688 பழங்கால நினைவுச்சின்னங்களாகவும் தொல்லியல் அகழாய்வு இடங்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் 414 இடங்களில் ஆக்கிரமிப்புகள் பதிவாகியுள்ளன என்று சென்ற வாரத் தொடக்கத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆக்கிரமிப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியக் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் எழுத்துவழி அளித்த பதிலில் தெரிவித்தார்.

பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் அகழாய்வு இடங்கள் சட்டம் 1958 விதிகளின்படி, ஒரு நினைவுச்சின்னத்தைப் பாதுகாப்பதற்கு அது அமைந்துள்ள நிலத்தைக் கட்டாயமாகக் கையகப்படுத்தவோ அல்லது அதன் உரிமையைப் பெறவோ வேண்டிய அவசியமில்லை.

இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் (ஏஎஸ்ஐ) முதன்மை நோக்கம், 1958ஆம் ஆண்டுச் சட்ட விதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் ஆகும்.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகள் அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகள் கவனத்திற்கு வரும் இடங்களில் எல்லாம் உரிய விதிகளின்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளின் எல்லையை முடிவுசெய்ய, பாதுகாக்கப்பட்ட எல்லைகளைப் பாதுகாக்கும் பொருட்டு உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்களின் மையங்களின் எல்லைகளை அளத்தல், புவிசார் குறியிடுதல், மின்னிலக்கமயமாக்கல் ஆகிய பணிகளைத் தொல்லியல் ஆய்வுத் துறை நிறைவுசெய்து, அவற்றை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்தகைய தரவுகளை மாநில நிலப் பதிவேடுகளுடன் ஒருங்கிணைக்கும் பணி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்