புதுடெல்லி: குஜராத் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ‘சர் கிரீக்’ பகுதியில் இந்திய ராணுவம் போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 30,000 வீரர்கள் பல்வேறு போர்ப் பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.
பயிற்சி நடைபெறும் ‘சர் கிரீக்’ பகுதியானது குஜராத் மாநிலத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியை வைத்து புதுச் சர்ச்சையைக் கிளப்ப பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளாக முயன்று வருவதாகவும் இதன் காரணமாகவே ராணுவப் பயிற்சிக்கு சர் கிரீக் பகுதியை இந்திய அரசு தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனா தனது படைகளைக் குவிப்பதுபோல் சர் கிரீக் பகுதியில் இந்தியாவும் படைகளைக் குவித்துள்ளது. இந்நிலையில், அங்கு அக்டோபர் 30 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை மொத்தம் 12 நாள்களுக்கு போர்ப் பயிற்சி நடைபெறும்.
30,000 வீரர்கள் பங்கேற்கும் இப்பயிற்சிக்கு ‘திரிசூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் கலக்கமடைந்துள்ள பாகிஸ்தான், தனது ராணுவமும் அக்டோபர் 28, 29ஆம் தேதிகளில் பயிற்சியில் ஈடுபடும் என அறிவித்துள்ளது.
“சர் கிரீக் என்பது ஒரு சதுப்பு நிலப்பகுதி. குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கு இடையே அமைந்துள்ள பகுதி இது.
பயிற்சியின்போது சர் கிரீக் பகுதியின் வான்பரப்பில் விமானங்களை பறக்கவிட வேண்டாம் என இந்திய அரசு எச்சரித்துள்ளது. இதேபோன்ற அறிவிப்பை பாகிஸ்தானும் வெளியிட்ட நிலையில், போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், நவீன ஆயுதங்களுடன் பயிற்சியில் ஈடுபட இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
‘சர் கிரீக்’ பகுதியையொட்டி பாகிஸ்தானின் ராணுவக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு புதிய கட்டடங்கள், போர் விமானங்களுக்கான ஓடுபாதை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தனது செயற்கைக்கோள்கள் உதவியோடு எடுத்த படங்கள் மூலம் இதை உறுதி செய்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது.
இதனிடையே, தசரா பண்டிகையையொட்டி குஜராத் மாநிலம், பூஜ் விமானப்படை தளத்தில் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்கள் எந்த இடத்தில் பதுங்கி இருந்தாலும் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
“இந்தியாவை அச்சுறுத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். யாராக இருந்தாலும் பதிலடி கொடுப்போம். இந்தியாவின் இலக்கு என்பது பயங்கரவாதிகள்தான். ஒருபோதும் போரைத் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை,” என்றார் ராஜ்நாத் சிங்.


