மனித உரிமைகளை மேம்படுத்த இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்

மனித உரிமைகளை மேம்படுத்த இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்

2 mins read
b24eea5b-93dc-40be-b655-5e3f17e61567
மனித உரிமைகள் தொடர்பான எதிர்கால ஒத்துழைப்பு, கலந்தாய்வுக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடலின்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: இந்தியா நியூஸ் நெட்வொர்க்

புதுடெல்லி: மனித உரிமைகளை மேம்படுத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள், புரிந்துள்ள சாதனைகள் ஆகியவை குறித்து இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரிவாக விவாதித்தன.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் அர்த்தமுள்ளதாகவும் சுதந்திரமானதாகவும் அமைந்திருந்ததாக இருதரப்பும் மனநிறைவு தெரிவித்தன.

புதுடெல்லியில் இந்திய-ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலின்போது மனித உரிமைகளை மேம்படுத்துவதற்குத் தங்களின் உறுதிப்பாட்டை இருதரப்பும் வெளிப்படுத்தின.

இந்தக் கலந்துரையாடலுக்கு மேற்கு ஐரோப்பாவுக்கான இந்திய வெளியுறவு அமைச்சின் கூடுதல் செயலாளர் பியூஷ் ஸ்ரீவாஸ்தவா, இந்தியாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஹெர்வ் டெல்பின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அந்தக் கலந்துரையாடல், மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து ஈடுபாடு காட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக அமைந்ததாக இருவரும் தெரிவித்தனர்.

உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உலகின் இரண்டாவது ஆகப் பெரிய ஜனநாயக அமைப்பாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மனித உரிமைகள் தொடர்பான எதிர்கால ஒத்துழைப்பு, கலந்தாய்வுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2025 ஜனவரியில் நடைபெற்ற முன்னைய கலந்துரையாடலின்போது வகுக்கப்பட்ட இலக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நடப்புக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள புதுடெல்லி கலந்துரையாடல் நல்ல வாய்ப்பை வழங்கியதாகப் பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், உலகளாவிய அளவில் மனித உரிமைகள் விவகாரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

2026 ஜனவரியில் புதுடெல்லியில் 16வது இந்திய ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலை மாநாடு நடைபெற்றது. அப்போது பகிரப்பட்ட முக்கியமான கொள்கைகளின் அடிப்படையில் இருதரப்பும் உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்கான தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிசெய்தன.

அந்தக் கலந்துரையாடலின்போது குடிமை, அரசியல் உரிமைகள் சமூக - பொருளியல், பண்பாட்டு உரிமைகள், புலம்பெயர்ந்தோர் உரிமைகள், சமயம் அல்லது நம்பிக்கை சார்ந்த சுதந்திரம் உள்ளிட்ட மேலும் பல்வேறு தளங்களின்கீழ் விவாதங்கள் நடைபெற்றன.

மேலும், மனிதர்களை மையமாக கொண்ட செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டையும் இருதரப்பும் மீண்டும் வலியுறுத்தின.

குறிப்புச் சொற்கள்