புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் தற்காப்பு தொடர்பான உடன்பாடுகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) கையெழுத்தாக உள்ளன.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் பங்காளித்துவ உடன்பாட்டில் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கஜா கல்லாஸும் கையெழுத்திடுவார்கள் என்று சில தகவல்கள் தெரிவித்தன.
கடல்துறை பாதுகாப்பு, இணையம் தொடர்பான விவகாரங்கள், வெவ்வேறு அச்சுறுத்தல்கள், பயங்கரவாத முறியடிப்பு, திட்டமிட்டு நிறைவேற்றப்படும் குற்றச்செயல்கள் ஆகியன தொடர்பாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை அந்த உடன்பாடுகள் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர், ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் ஆண்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
அந்த இரு தலைவர்களையும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.
அதன் பிறகு அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
ஐரோப்பிய தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இந்திய - ஐரோப்பிய ஒன்றிய உறவில் புதிய சகாப்தத்திற்கான சாத்தியம் உள்ளதாகக் கூறினார்.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவையும் எஸ்.ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இந்தச் சந்திப்பின்போது விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அமெரிக்க எம்.பி.க்கள் ஜிம்மி பாட்ரோனிஸ், மைக் ரோஜர்ஸ் மற்றும் ஆடம் ஸ்மித் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினருடன் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோரும் பங்கேற்றார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், “அமெரிக்க எம்.பி.க்களுடனான பேச்சுவார்த்தை மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தியா - அமெரிக்கா இடையிலான பல்வேறு உறவுகள், இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம் மற்றும் உக்ரேன் போர் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
“இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் அமெரிக்க நாடாளுமன்றத்துடனான தொடர்புகள் எப்போதும் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றன,” என்றார்.
அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்ட பதிவில், “பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான வகையில் விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

