புது தில்லி: இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு இவ்வாண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சசநிலை மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்சையும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவுக்கும் ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள அண்மை முன்னேற்றங்களை ஆய்வு செய்ததோடு, மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வையும் திரு மோடி வரவேற்றார்.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஐரோப்பிய ஆணையத் தலைவர் வான்டெர் லேயன் பேசினார்.
“மிகப்பெரிய வர்த்தக உடன்பாட்டை நாங்கள் இறுதிசெய்திருப்பதால், அதுதொடர்பான எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேகமாகச் செயல்பட்டு வருகிறோம்,” என்றார் அவர்.
“இந்த ஆண்டு இறுதிக்குள் தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவோம். அத்துடன், முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான பணிகளையும் விரைவுபடுத்துவோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
பாதுகாப்பு, தற்காப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதோடு, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளியல் வழித்தடமான ‘ஐஎம்இசி’யை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த இணைப்புக்காக இருதரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவர் என்றும் திருவாட்டி உர்சுலா கூறினார்.
இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அண்மையில் முடிவடைந்ததை ஒரு வரலாற்றுச் சாதனை என்று திரு மோடியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களும் புகழ்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த உடன்பாடு, உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில் வர்த்தகத்திற்கும் முதலீட்டுக்குமான பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்துவதில் அது பங்காற்றும் என்றும் அவர்கள் கூறினர்.

