உலக நாடுகளை வரி விதித்து தண்டிக்கத் தயாராகும் அமெரிக்கா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: மசோதாவிற்கு பச்சைக்கொடி காட்டிய டிரம்ப்

2 mins read
9a1f9f94-c084-47e4-bf46-7e66183bc972
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் அனைத்துலக நாடுகளுக்கு 500 விழுக்காடு வரி விதிக்க வழிவகைசெய்யும் மசோதா, இந்தியா அமெரிக்கா நட்பில் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி. - கோப்புப் படம்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் அனைத்துலக நாடுகளுக்கு 500 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்க வழிவகைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துவிட்டார்.

ரஷ்யாவிடம் மலிவான விலையில் எண்ணெய் வாங்கும் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா திகழ்ந்து வரும் வேளையில், தற்போது பேரளவிலான வரியை விதிக்க அமெரிக்கா இலக்குக் கொண்டுள்ளதால், இந்த நடவடிக்கை இந்தியா அமெரிக்கா நட்புறவில் புதிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு இதுவரையில் இல்லாத அளவாகப் பல நூறுமடங்கு வரி விதிக்கக் கோரும் மசோதா நிலுவையிலிருந்து வந்தது.

எனினும் இந்த மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய  அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துவிட்டதாக அமெரிக்க மேலவை உறுப்பினர் லின்ட்சே கிரஹம் கூறியுள்ளார்

இதனால் அடுத்த வாரமே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தார்.

அவ்வகையில் அவரது வாக்குக்குச் செவிகொடுக்காமல் தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதிக்கும் என்பதும் நினைகூரத்தக்கது.

இந்த நிலையில்தான் மேற்கூறிய புதிய மசோதாவை அமெரிக்கா தற்போது கையிலெடுத்துள்ளது.  இத்தகவலை ‘எக்ஸ்’ வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்த திருவாட்டி லின்ட்ஸே, எண்ணற்ற பிரச்சினைகள்குறித்து மிகவும் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது என்றும்,  அதில் மாதக் கணக்கில் பணியாற்றி உருவாக்கம் கொடுத்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்  ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘‘ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி, சீனா, இந்தியா பிரேசில் போன்ற நாடுகளைக் கட்டாயப்படுத்துவதற்கு இந்த மசோதா அதிபர் டிரம்ப்புக்கு மிகப்பெரிய செல்வாக்கை வழங்கிடும் என்றும், இன்னும் சில நாள்களில் வலுவான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்படும்,’’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்