தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு

2 mins read
2bf717b8-ea8c-47ba-82e0-4b4d4bc322b1
வங்கிகளும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் தனிநபா்களுக்கு வழங்கும் தங்க நகைக் கடன் தொடா்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளை அடுத்த ஆண்டு (2026) ஜனவரியில் நடைமுறைப்படுத்துவதே பொருத்தமாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சு தெரிவித்து உள்ளது.

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபா்களுக்கு வழங்கும் தங்க நகைக் கடன் தொடா்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது.

அந்த விதிமுறைகள் நகைக் கடன் பெறுவோரை கடுமையாகப் பாதிக்கும் என பல்வேறு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. புதிய வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யுமாறு ரிசா்வ் வங்கிக்கு ஆலோசனை கூறுமாறு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறை (டிஎஃப்எஸ்), புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து சிறு கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்க ரிசா்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சு தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

புதிய விதிமுறைகளால் சிறிய அளவில் நகைக் கடன் பெறுவோா் கடுமையாகப் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உரிய நேரத்தில் விரைவாக நகைக் கடன் கிடைப்பதையும் ரிசா்வ் வங்கி உறுதிப்படுத்த வேண்டும்.

அந்த வகையில், ரூ. 2 லட்சத்துக்கு கீழ் நகைக் கடன் பெறுவோருக்கு இந்தப் புதிய விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.

மேலும், இந்தப் புதிய வழிகாட்டுதல்களை கள அளவில் நடைமுறைப்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படும். எனவே, 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிமுதல் இந்தப் புதிய வரைவு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் நிதிச் சேவைகள் துறை (டிஎஃப்எஸ்) பரிந்துரைத்துள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த வரைவு விதிமுறைகள் தொடா்பாக பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ரிசா்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்