பனிப் பூமியில் சுருங்கிவரும் ஏரியை மீட்கப் போராடும் இந்தியா

பனிப் பூமியில் சுருங்கிவரும் ஏரியை மீட்கப் போராடும் இந்தியா

2 mins read
33f1bca4-b6b0-4603-8fa0-397c70188b1c
ஒருகாலத்தில் ஏறக்குறைய 11,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருந்த ‘த்சோ கர்’ ஏரி, தற்போது வெறும் 3,200 ஏக்கராகச் சுருங்கியுள்ளது. - படம்: என்டிடிவி

லடாக்: இமய மலைப் பகுதியில் அமைந்துள்ள லடாக்கின் மிக முக்கியமான உயர்மட்ட ஏரிகளில் ஒன்றான ‘த்சோ கர்’ (Tso Kar) ஏரி, கடந்த பத்து ஆண்டுகளில் தனது பரப்பளவில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமாக இழந்து அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் ஏறக்குறைய 11,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருந்த இந்த ஏரி, தற்போது வெறும் 3,200 ஏக்கராகச் சுருங்கியுள்ளது.

இந்தச் சூழல் சீர்கேட்டினால், அப்பகுதிக்கு ஆண்டுதோறும் வருகைதரும் அபூர்வ ‘கறுப்பு கழுத்து நாரை’ (Black necked crane) உள்ளிட்ட வலசைப் பறவைகளின் வருகை குறைந்துள்ளது.

மேலும், அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமான ‘பஷ்மினா’ ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் பாழடைந்துள்ளன.

ஏரியைப் பழைய நிலைக்குக் கொண்டுவர, லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் ஒரு புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி ஏறக்குறைய 18,045 அடி உயரத்தில் அமைந்துள்ள ‘ரூப்ஷோ கர்னாக்’ பனிப்பாறை அருவியின் நீரைப் பயன்படுத்தி ஏரியை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது சிந்து நதியில் வீணாகக் கலக்கும் இந்த நீரிலிருந்து நாளொன்றுக்கு ஏறக்குறைய 320 மில்லியன் லிட்டர் ‘நீர் த்சோ கர்’ ஏரிக்குத் திருப்பிவிடப்படும்.

இயற்கைச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, புதிய கான்கிரீட் கால்வாய்களுக்குப் பதிலாக எளிய மண் கால்வாய்கள், மூன்று இயற்கை தாழ்வுப் பகுதிகளைப் பயன்படுத்தி புவியீர்ப்புச் சக்தி மூலம் நீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நீர் நிலைகள் வண்டல் படிவுகளை வடிகட்டும் புதிய நன்னீர்ச் சதுப்பு நிலங்களாக மாறுவதுடன், பறவைகளுக்கான புதிய புகலிடமாகவும் அமையும். செப்டம்பர் 9 முதல் இதற்கான நீர் திருப்பி விடப்படும் பணிகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரத்திற்குள் முதல் கட்ட நீர் ஏரியைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2027ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ‘த்சோ கர்’ ஏரியை முழுமையாக மீட்டு அதனை உருஆவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடுமையான வானிலை நிலவும் மிக உயர்ந்த மலைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, இந்தியாவில் சுற்றுச்சூழல் மீட்புப் பணிகளுக்கு ஒரு புதிய முன்னுதாரணமாக அமையும் எனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்