பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்துவதில் இந்தியா முதலிடம்

1 mins read
9dbd864f-e0fc-476c-ad23-18b953b76990
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 9.3 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.  - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: நீண்டகாலமாக, உலகில் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்று வருகிறது.

ஆண்டுதோறும் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவின் அடிப்படையில் இந்தியாவுக்கு முன்னால் சீனா மட்டுமே உள்ள நிலையில், புதிதாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்துவதில் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது என ‘நேச்சர்’ அறிவியல் சஞ்சிகை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் முன்னின்று ஆய்வை மேற்கொண்டனர்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 9.3 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் கொட்டப்படும் பிளாஸ்டிக் அளவில் ஐந்தில் ஒரு பகுதி இது என்று குறிப்பிட்டு உள்ளது என இம்மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது.

கழிவு நிர்வாகத்திற்குக் கட்டுப்படாத, திறந்தவெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அவை என்றும் ஆய்வு கண்டறிந்தது.

இந்தியாவுக்கு அடுத்த நிலையில் நைஜீரியாவில் 3.5 மில்லியன் டன், இந்தோனீசியாவில் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. நான்காவது இடத்தில் உள்ள சீனா 2.8 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகளை வெளியில் கொட்டுகிறது என ஆய்வறிக்கை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்