திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் மின்னிலக்க நீதிமன்றம் கேரள மாநிலத்தின் கொல்லத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரும் இந்த நீதிமன்றத்தில் 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்.
வாரம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் இந்த மின்னிலக்க நீதிமன்றத்தில் சட்ட வழக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்தப் புதிய மின்னிலக்க நீதிமன்றத்தைத் திறந்து வைத்தார்.
மேலும், மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, பிணைப் பெற நேரில் யாரும் முன்னிலையாக வேண்டும் என்ற அவசியமில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணைப் பெறுவதற்கான ஆவணங்களை இணையம் மூலம் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்குகளின் தேக்கத்தை குறைக்கவும் விரைவான சட்ட தீர்வுகளை வழங்கவும் இந்த மின்னிலக்க நீதிமன்றம் பேருதவியாக இருக்கும் எனக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.