மும்பை: வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உலகளாவிய தொழில்நுட்பப் போட்டியில் அமெரிக்கா, சீனாவுக்கு இணையான வளர்ச்சியைப் பெறுவதிலும் இந்தியா கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
‘டீப் டெக்’ (Deep Tech) நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க 25 பில்லியன் டாலரை ஒதுக்க இந்தியா தயாராகி வருகிறது.
‘டீப் டெக்’ என்பது செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்திகள், மேம்பட்ட உற்பத்தி, ஆளில்லா வானூர்திகள், விண்வெளித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள தொடக்க நிலை நிறுவனங்களைக் குறிக்கும் ஒரு பரந்த சொல்லாகும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா ‘டீப் டெக்’ துறையில் 11.6 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளதாக ‘இந்திய வென்ச்சர், ஆல்டர்நேட்டிவ் கேப்பிடல்’ சங்கத்தின் தலைவர் ரஜத் டாண்டன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி ஆராய்ச்சி மேம்பாட்டு உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 11 பில்லியன் டாலரை முதலீடு செய்ய அரசாங்கம் மட்டுமே உறுதியளித்துள்ளது.
அரசாங்கத்துக்கு இணையாகத் தனியார் முதலீட்டு நிதி மேலாளர்களும் முதலீடு செய்வார்கள் என்று திரு ரஜத் கூறினார்.
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், முன்னணித் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதால் இந்த நிதி உந்துதல் வந்துள்ளதாகக் கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் சீனாவும் அமெரிக்காவும் தற்போது முன்னணியில் உள்ளன.
இந்தியாவில் சீனத் தொழில்நுட்பம் சந்தேகத்துடன் பார்க்கப்படும் அதே வேளையில், தொழில்நுட்ப ஏற்றுமதியில் அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகள் அதனை நம்பகத்தன்மையற்றதாக ஆக்குகின்றன.
அமெரிக்க அரசாங்கத்தின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்க, ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது புதிய மாதிரிகளான ஃபேபிள் 5, மைத்தோஸ் 5 ஆகியவற்றை வெளிநாட்டினர் பயன்படுத்துவதை முடக்கியபோது, இந்த அச்சங்களில் சில கடந்த ஜூன் மாதத்திலேயே உண்மையாகின.
‘சூப்பர்ரிட்டர்ன் ஆசியா’ மாநாட்டில் ஒன்றுகூடிய நிதித் தலைவர்கள், இந்தியாவின் ‘டீப் டெக்’ நிறுவனங்கள் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகக் கூறினர்.
ஆயினும், யோசனைகள், திறமைகளின் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவில் உலகளாவிய வெற்றியாளர்களை உருவாக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
