தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்த இந்தியா, பிரான்ஸ் உறுதி

2 mins read
7b21f03c-48b5-4ce5-be5c-9c60db620cf2
இரு தலைவர்களும் உக்ரேன் விவகாரம் குறித்தும் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலை குறித்தும் விவாதித்தனர். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோனுடன் தாம் தொலைபேசியில் மிகச் சிறந்த உரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் உக்ரேன் விவகாரம் குறித்தும் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலை குறித்தும் விவாதித்தனர்.

இதையடுத்து வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், இந்தியா, பிரான்ஸ் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்த இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் உக்ரேன், மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காண மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான வலுவான உத்தரவாதங்களுடன், நீடித்த அமைதியை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் பிரான்சின் நிலைப்பாடு குறித்து விவாதித்ததாக இமானுவெல் மெக்ரோன் தமது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

வர்த்தகப் பிரச்சினைகளில், அனைத்துத் துறைகளிலும் பொருளியல் பரிமாற்றங்களையும் கூட்டாண்மையையும் வலுப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தங்கள் தரப்பின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான திறவுகோல் என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைமையில் நடக்கவுள்ள ‘ஜி 7’ உச்சநிலை மாநாட்டிற்கும் 2026ல் இந்தியா தலைமையில் நடக்கவுள்ள ‘பிரிக்ஸ்’ உச்சநிலை மாநாட்டிற்குமான ஏற்பாடுகள் தொடர்பில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம் என்றார் திரு மெக்ரோன்.

மேலும், ஐநா மன்றத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக சீர்திருத்தம் செய்வதற்கான அவசியம் உட்பட, மற்ற விவகாரங்கள் தொடர்பில் இருதரப்பும் ஒருங்கிணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்த அவர், இரு நாடுகளும் கொண்டுள்ள உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்தக் கொண்டுள்ள கடப்பாட்டை மறு உறுதி செய்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026’ தொடக்க விழா சிறப்பாக நடந்தேறியது.

அப்போது புத்தாக்க ஆண்டுக்கான இலச்சினையை (லோகோ) இந்தியப் பிரதமரும் பிரான்ஸ் அதிபரும் வெளியிட்டனர்.

அப்போது அறிவியல் அறிவு, ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், அத்துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால, நீடித்த ஒத்துழைப்பை நினைவுகூறும் வகையில் ‘புத்தாக்க ஆண்டு’ கொண்டாடப்படும் என இருவரும் தெரிவித்திருந்தனர்.

மேலும், உத்திபூர்வ பங்காளித்துவ அடிப்படையில், நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தியா-பிரான்ஸ் இடையே தற்காப்பு சார்ந்த ஒத்துழைப்பை வரவேற்ற இரு நாட்டின் தலைவர்களும் வான் மற்றும் கடல்சார் ஆதாரங்கள் சார்ந்த ஒத்துழைப்பைத் தொடரவும் விருப்பம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்