தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காப்பு, விண்வெளித் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்தியா, பிரான்ஸ்

2 mins read
252bafa5-2924-42de-934a-07a79e70d3e7
பிரான்சின் மார்செய் நகரில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (இடது), பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஷோ-நோவெல் பேரட். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: தற்காப்பு, பாதுகாப்பு, விண்வெளி, அமைதியான சூழலுக்கான அணுசக்திப் பயன்பாடு (civilian-nuclear) போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ள இந்தியாவும் பிரான்சும் ஒப்புக்கொண்டுள்ளன.

இதுபோன்ற பல்வேறு விவகாரங்களின் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ‌ஷோ-நோவெல் பேரட்டும் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பேச்சுவார்த்தை நடத்தினர்.

கா‌ஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்ததற்கு இந்தியா மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக திரு ஜெய்சங்கர் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமைக்கு பிரான்ஸ் மிகுந்த ஆதரவை வெளிப்படுத்தியதற்கு திரு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துக்கொண்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் குறிப்பிட்டது.

பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே மிகுந்த நம்பிக்கை இருப்பதாக திரு ஜெய்சங்கர் சுட்டினார். பிரான்சின் மார்செய் நகரில் இரு அமைச்சர்களும் சந்தித்த பிறகு நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் அவர் அவ்வாறு சொன்னார்.

உக்ரேன் போர் மற்றும் மத்திய கிழக்கு, இந்தோ பசிபிக் வட்டார நிலவரம் போன்ற உலக விவகாரங்கள் குறித்து இருதரப்பும் பேசிக்கொண்டதாகவும் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

“இது, கருத்து வேறுபாடுகளுக்குப் போர் மூலம் தீர்வுகாணும் காலகட்டம் அல்ல என்பதே எங்களின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. பேச்சுவார்த்தை, அரசதந்திர அணுகுமுறை ஆகியவற்றால்தான் தீர்வுகாண முடியும். போர்க் களத்தில் எந்தத் தீர்வும் பிறக்காது என்பதே எங்களின் நிலைப்பாடாக இருக்கிறது,” என்று அவர் விவரித்தார்.

தற்காப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், மக்களிடையிலான உறவு, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்தும் இருதரப்பும் மிகவும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

“அதோடு, கல்வி, ஆய்வு, வர்த்தகம், நீக்குப்போக்கு உள்ள சூழல் ஆகியவற்றின் வாயிலாக எவ்வாறு நமது உறவுக்குக் கூடுதல் மெருகூட்டலாம் என்பது பற்றியும் நாங்கள் சிறிது நேரம் பேசினோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்