புதுடெல்லி: அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுவரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த பத்து நாள்களில் மூன்றாவது முறையாக அவற்றின் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் புதுடெல்லியில் டாக்சி, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் இந்த விலையுயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்துவரும் போர்ச் சூழலாலும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளாலும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 105 அமெரிக்க டாலரைத் தாண்டிவிட்டது. இந்த இறக்குமதிச் செலவுகளை ஈடுகட்டும் பொருட்டு, உள்நாட்டிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் 87 காசு உயர்த்தப்பட்டு 105.36 ரூபாய்க்கும், டீசல் 91 காசு உயர்த்தப்பட்டு 97.02 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. பெட்ரோல் விலை கோல்கத்தாவில் 110 ரூபாயையும் மும்பையில் 108 ரூபாயையும் தாண்டிவிட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக விலையை உயர்த்தாமல் சிறுக சிறுக அதிகரித்து வருகின்றன. எனினும், இந்தத் தொடர் விலையுயர்வால் லாரி உள்ளிட்ட சரக்குந்துக் கட்டணங்கள் நூற்றுக்கு மூன்று விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளது. இதனால், இன்றியமையாப் பண்டங்களின் விலையும் ஏறும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு
இதனிடையே, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள 60 சுங்கச்சாவடிகளில், 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கான மாதக் கட்டணத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மீண்டும் பத்து ரூபாய் உயர்த்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதிதான் இக்கட்டணம் 330 ரூபாயிலிருந்து 340 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது 52 நாள்களுக்குள் மீண்டும் உயர்த்தப்பட்டு, சனிக்கிழமை (மே 23) முதல் புதிய கட்டணமாக 350 ரூபாய் நடைமுறைக்கு வருகிறது.
இதற்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
“அண்மைச் செய்தியாக அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ரூ.10 முதல் ரூ.100 வரை சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக வந்திருக்கும் செய்தி எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக இருக்கின்றது. மாற்றுவழிகளில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்குத் திட்டமிடுவதோடு, அறிவித்துள்ள சுங்கக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என்று அவ்வமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள 77 சுங்கச் சாவடிகளில் 60 சாவடிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியும், எஞ்சிய 17 சாவடிகளுக்கு செப்டம்பர் 1ஆம் தேதியும் ஆண்டுதோறும் கட்டண மறுஆய்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

