தற்காப்புப் பங்காளித்துவத்தை வலுப்படுத்த இந்தியா, ஜெர்மனி இணக்கம்

தற்காப்புப் பங்காளித்துவத்தை வலுப்படுத்த இந்தியா, ஜெர்மனி இணக்கம்

2 mins read
4e21abd8-cd77-4067-ab26-0e375e956eb8
ஜெர்மனியின் கீல் நகரில் உள்ள போர்க்கப்பல் தயாரிப்பு நிறுவனமான டிகேஎம்எஸ் கப்பல் கட்டும் தளத்தை இரு அமைச்சர்களும் பார்வையிட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உத்திபூர்வ தற்காப்புப் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஜெர்மனியின் தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியசை பெர்லின் நகரில் சந்தித்துப் பேசினார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது தற்காப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, சிறப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவிகளைக் கூட்டாக மேம்படுத்துவது, உற்பத்தி செய்வது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

இருதரப்பு உத்திபூர்வக் கூட்டாண்மையின் ஓர் அங்கமாக, இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு தலைவர்களும் தங்கள் கடப்பாட்டை உறுதி செய்தனர்.

இந்தியா, ஜெர்மனி இடையேயான புதிய தற்காப்புத் திட்ட வரைவு, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் படையை நவீனமயமாக்க வேண்டும் என்ற புதுடெல்லியின் நீண்டகால முயற்சிக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் எனத் துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும், இந்தோ-பசிபிக் வட்டாரப் பாதுகாப்பான தனது பங்களிப்பை ஐரோப்பா விரிவுபடுத்தவும் உதவும் எனக் கூறப்படுகிறது.

இரு நாடுகளும் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 22) பெர்லினில் தற்காப்புத் தொழில்துறை ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தில் கையெழுத்திட்டன. இதையடுத்து மேம்பாடு, உற்பத்தி, சிறப்புத் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இருதரப்பும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் ஜெர்மனி பயணத்தின்போது எட்டு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகுமா எனும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. எனினும், தற்போது ஒப்பந்தம் செய்யப்படும் என்றாலும் மிக விரைவில் ஜெர்மனி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்று எதிர்பார்ப்பதாக பிஸ்டோரியஸ் தெரிவித்தார்.

“குறிப்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங், அவரது தூதுக்குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்,” என்று இரு அமைச்சர்களும் தைசென்க்ரப் மரைன் சிஸ்டம்ஸ் (TKMS) நிறுவனத்தைப் பார்வையிட்ட பிறகு பிஸ்டோரியஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிப்பதற்காக, டிகேஎம்எஸ் நிறுவனம், இந்திய அரசுக்குச் சொந்தமான மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் கூட்டுசேர உள்ளது.

குறிப்புச் சொற்கள்