புதுடெல்லி: இந்திய விமான நிலையங்கள் ஆணையம் 7 விமான நிலையங்களில் 11 புதிய விமானப் பயிற்சிப் பள்ளிகளுக்கான குத்தகைச் செயல்முறையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.
ஆக அண்மைய மின் குத்தகைச் சுற்று இவ்வாண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.
உள்நாட்டு விமானிப் பயிற்சி ஆற்றல்களை வலுப்படுத்துவதும் வெளிநாட்டு விமானப் பயிற்சிப் பள்ளிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதுமே அதன் நோக்கம்.
இந்தியாவின் பொது விமானப் போக்குவரத்துத் துறை அதிவிரைவில் விரிவாக்கம் காணவிருக்கிறது. பொது விமானப் போக்குவரத்து அமைச்சு அடுத்த பத்தாண்டுகளில் கூடுதலாக 30,000க்கும் அதிகமான விமானிகள் தேவைப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாகக் கிட்டத்தட்ட 500 விமானங்களைச் சேவையில் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 50 விமான நிலையங்களுடன் விமான நிலையக் கட்டமைப்பு வளர்ச்சிகாணும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் பொது விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகத்தின் ஒப்புதல் பெற்ற 14 விமானப் பயிற்சிப் பள்ளிகள் 63 தளங்களில் செயல்பட்டு வருகின்றன.
உள்நாட்டுப் பயிற்சி ஆற்றலை விரைவில் விரிவுபடுத்தாவிட்டால், அதிகரித்துவரும் தேவையை நிலைக்கக்கூடிய வகையில் பூர்த்திசெய்ய முடியாது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் எச்சரித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில், ஐந்து விமான நிலையங்களில் விமானப் பயிற்சிப் பள்ளிகளுக்கென 9 இடங்கள் வழங்கப்பட்டன. 2022ல், ஐந்து விமான நிலையங்களில் மேலும் 6 இடங்கள் வழங்கப்பட்டன.
முதற்கட்டமாக, 11 புதிய விமானப் பயிற்சிப் பள்ளிகளில் 60 முதல் 70 வரையிலான பயிற்சி விமானங்கள் சேர்க்கப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

