புதுடெல்லி: அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை அடுத்து, அந்நாட்டிற்கான அனைத்துலக அஞ்சல் சேவைகளில் பெரும்பாலானவற்றை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) முதல் இந்திய அஞ்சல்துறை நிறுத்தவிருக்கிறது.
இப்போது 800 அமெரிக்க டாலர் (S$1,016) வரை மதிப்புடைய பொருள்களை சுங்கக் கட்டணமின்றி அந்நாட்டிற்கு அனுப்ப முடிகிறது. இந்நிலையில், அச்சலுகையை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு கடந்த ஜூலை 30ஆம் தேதி ஆணை பிறப்பித்தது.
அதன்படி, ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் சுங்கவரி செலுத்த வேண்டும். ஆயினும், நூறு டாலர் வரையிலான பரிசுப் பொருள்களுக்கு மட்டும் வரிச்சலுகை தொடரும்.
இதனையடுத்து, அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை அமெரிக்காவில் விநியோகம் செய்வதற்கு நூறு டாலர் வரையிலான கடிதங்கள், ஆவணங்கள், பரிசுப்பொருள்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ளது. மற்ற பொருள்களுக்கான அஞ்சல் சேவை ரத்துசெய்யப்படும்.
ஆயினும், இவ்விவகாரம் தொடர்பில் தீர்வுகாண்பதற்கு அமெரிக்கச் சுங்க, எல்லைப் பாதுகாப்புத் துறை, அஞ்சல்துறை உள்ளிட்ட உரிய பங்காளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்திய அஞ்சல்துறை கூறியுள்ளது.
முன்னரே பதிவுசெய்திருந்து விநியோகம் செய்ய முடியாமல் போகும்பட்சத்தில் அஞ்சல் கட்டணம் திருப்பித் தரப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். அமெரிக்காவிற்குக் கூடிய விரைவில் முழுமையான அஞ்சல் சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு எங்களாலான முயற்சிகளை எடுத்து வருகிறோம்,” என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

