இந்தியாவின் முதல் டெங்கித் தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவின் முதல் டெங்கித் தடுப்பூசிக்கு ஒப்புதல்

2 mins read
863cc976-d679-444a-964d-fd47c8c33e32
கியூடெங்கா’ (QDENGA) தடுப்பூசிக்கான ஆக அண்மைய 7 ஆண்டுகாலத் தரவுகள், அது டெங்கிக் காய்ச்சலுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குவதாகக் காட்டுகின்றன. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: இந்தியா அதன் முதல் டெங்கித் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் ‘டக்கேடா பயோஃபார்மசூட்டிகல் இந்தியா’ நிறுவனம் தயாரித்த ‘கியூடெங்கா’ தடுப்பூசியைச் சந்தைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அந்தத் தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரையிலானோர் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அதற்கு முன்னதாக டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைப் போட்டுக்கொள்ள முடியும்.

மற்ற சில டெங்கித் தடுப்பூசிகளைப் போல் அல்லாமல், ‘கியூடெங்கா’ தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்குமுன் தடுப்பூசிக்கு முந்தைய பரிசோதனைகளைச் செய்யத் தேவையில்லை.

அதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியுள்ளவர்கள் தங்களுக்கு ஏற்கெனவே டெங்கி பாதிப்பு இருந்ததா என்பதைப் பரிசோதிக்காமலேயே அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும்.

ஆண்டுதோறும் மில்லியன்கணக்கானோரைப் பாதிக்கும், கொசுக்களால் பரவும் டெங்கி நோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில், இந்த ஒப்புதல் ஒரு முக்கிய மைல்கல் என்று ‘டக்கேடா’ நிறுவனம் தெரிவித்தது.

2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ‘கியூடெங்கா’ தடுப்பூசி 43 நாடுகளில் ஒப்புதல் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 32 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த ஒப்புதல் இந்தியாவில் டெங்கி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது,” என்று டக்கேடாவின் அனைத்துலகச் சந்தைப் பிரிவின் தலைவர் மகேந்தர் நாயக் கூறினார்.

அனைத்து நான்கு வகை டெங்கிக் கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்கு எதிராக அந்தத் தடுப்பூசி வலுவான பாதுகாப்பை வழங்குவதை ஏழு ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட தரவுகள் காட்டுவதாக அந்நிறுவனம் கூறியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதோடு, அந்தத் தடுப்பூசியால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் சூழலைத் தவிர்க்கமுடியும் என்றும் அது தெரிவித்தது.

‘கியூடெங்கா’ தடுப்பூசி 0.5 மில்லிலிட்டர் அளவு கொண்ட இரண்டு ஊசிகளாக, மூன்று மாத இடைவெளியில் தோலுக்கு அடியில் செலுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்